பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்


கோயில் நிர்வாகத்துக்குச் சிறந்த முறை! திருக்கோயிலுக்குச் சொத்துக்கள் இருப்பதைவிட, மனிதர்கள்-வழிபடுவோர்கள் தான் தேவை. மெள்ள மெள்ள எங்கள் பஜனைக் குழு வளர்ந்தது.

விநாயகர் கோயிலில் பஜனை நடந்தது. விநாயகர் கோயில்தான்; ஆயினும் வைணவச் சாயல் கூடுதலாகவே இருந்தது. பஜனைக் குழு வீதியில் பாடல்கள் பாடிக்கொண்டு போகும் போது வேடம், போட்டு ஆடுதலும் - நிகழ்ந்தது, ரெங்கநாதனுக்குக் கிடைத்த வேடம், அனுமான் வேடம்! அனுமான் வேடத்தில் உண்டியல் குலுக்கி வருவான்.

இங்ஙனம் அமைதியாக நகர்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு பூகம்பம் வருவதற்குரிய சூழல் உருவா யிற்று. தந்தையும் தாயும் பேசத் தொடங்கினார்கள்.

"படித்துவிட்டு வேலைக்கு போகாமல் உட்கார்ந்திருக் கிறானே!”-இது தந்தையின் குமுறல்!

“எதற்காக வேலைக்கு போகணும்? மூத்த ரெண்டு பிள்ளைகளும் வேலைக்குப் போய்விட்டார்கள்! கடைசிப் பையன் வீட்டில் தான் இருக்கட்டுமே! வீடும் விளக்கமாக இருக்கட்டும்!”-இது. தாயின் எண்ணம். தந்தைக்கு உடன்பாடில்லை. தந்தையின் கட்சியில் மூத்த தமையனாரும் இருந்தார்.

ஒரு நாள் எங்கள் குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய தலைஞாயிறு குஞ்சிதபாதம்பிள்ளை வந்தார். இவர் அரிசி ஆலை அதிபர். தந்தையாரும் இந்தக் குஞ்சிதபாதம் பிள்ளையும் பேசிய பேச்சின் சாரம் தருமபுரம் மடத்தில் ரெங்கநாதனை வேலைக்குச் சேர்த்துவிடுவதாகும்.

குஞ்சிதபாதம்பிள்ளை உறுதி கூறிவிட்டுச் சென்று விட்டார். தந்தையார் மெள்ளப் பேச்சைத் தொடங்கினார். எடுத்த எடுப்பிலேயே ரெங்கநாதன் மறுத்துவிட்டான். தந்தைக்குக் கோபம்.