பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குருபூஜைக்குச் செல்வார். கந்தசாமித் தம்பிரானின் நம்பிக்கைக்கும் உரியவர். சம்பந்த ஓதுவாரைக் கலந்தார். அவர் "சமாளித்துக் கொள்ளலாம்” என்றார்.

குன்றக்குடி ஆதீன குருபூஜை விழாவுக்கு கந்தசாமித் தம்பிரான் பயணமானார். முதல் நாள் காரைக்குடி வந்து சோமசுந்தரம் பிள்ளை மரக்கடையில் தங்கல். அந்தக் காலத்தில் சோமசுந்தரம் பிள்ளை மரக்கடை செல்வாக்காக இருந்தது. இவருடைய கூட்டாளி செல்லையா பிள்ளை. இவர்கள் இருவரும் குன்றக்குடி ஆதீனத்துக்கு மிகவும் வேண்டியவர்கள். காலத்தால் பல நல்ல உதவிகள் செய்த வர்கள். சோமசுந்தரம் பிள்ளை சுத்த சைவர். பஞ்சகச்சம் கட்டுவார். கழுத்தில் நவரத்தினம் வைத்துக் கட்டிய உருட்தி ராட்சமாலை. உச்சிக்குடுமி நீறு நிறைந்த நெற்றியுடன் விளங்குவார். நாளும் பூஜை தவறாமல் செய்வார். இவருடைய கடையின் மாடி தங்குவதற்கு உரிய வசதிகளுடையது. அங்கு தங்கல்; நல்ல உபசரணை! பழகும் உறவுக்கு சோமசுந்தரம் பிள்ளை ஓர் எடுத்துக்காட்டாவார்.

கந்தசாமித் தம்பிரான் குன்றக்குடிக்கு வந்து சேர்ந்ததும், கைலாசம் பிள்ளையும் அவர் புதல்வர் கனகசபை பிள்ளையும் வந்திருந்ததைக் கண்டார். ஆனால், கந்தசாமித் தம்பிரானுடன் கைலாசம் பிள்ளை பேசவில்லை. ஒதுங்கிப் போனார். கனகசபை பிள்ளை மட்டும் பேசினார். மகேஸ்வர பூஜைக்குப் பிறகு குன்றக்குடி ஆதீனத்தில் ஒரு நிகழ்ச்சி உண்டு, அதற்குப் பெயர் 'தர்பார்', மற்ற ஆதீனங்களில் தர்பார் இல்லை. மாலை மூன்று மணிக்குத் தர்பார். ஆரம்பமானது. அதுபோது பல்வேறு தரப்பினர் குன்றக்குடி ஆதீனம் மகாசந்நிதானம் அவர்களைக் கண்டு கொண்டனர். அப்போது எதிர்பாராமல் கந்தசாமித் தம்பிரான் சொற்பொழிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் பெற்றார். திறமைகள் வெளிப்பட வேண்டாத இடம் என்று கந்தசாமி தம்பிரான் உணர்ந்தார்; பேசினார். சிறப்பாகப் பேசக்கூடாது