பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

185


எனக்குத் தேவை மனிதன் மீதுள்ள இழிவு அகற்றப்பட வேண்டும் என்பதே நம்முடைய நாட்டில் இந்த இழிவை மாற்ற மத உலகத்திலும் சிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண்ட பலன் தோல்வியே! நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். பலன் தருமா; சந்தேகந்தான்” என்றார்.

"இருவருமாகச் சேர்ந்து உழைப்போம் p. என்றோம் நாம். பெரியார் சிரித்துக்கொண்டே "எனக்கு ஆட்சேபணை இல்லை உங்கள் சம்பிரதாயங்கள் இடம் தருமா?" என்றார். நாம், "முயற்சி செய்யலாம். சம்பிரதாயங்கள் என்பவை காலந்தோறும் மாறுபவைதானே!" என்றோம்.

"சரி, பார்ப்போம்! முயற்சி செய்வோம்.” என்று இருவரும் ஒரே நேரத்தில் கூற, பேச்சு முடிந்தது.

பெரியார் விடைபெற்றுக் கொண்டு எழுந்தார். நாமும் அவரை வழியனுப்ப எழுந்தோம். உடனே பெரியார் "இல்லை! இல்லை! மகாசந்நிதானம் அமருங்கள்! எனக்கு எல்லா மரபுகளும் தெரியும். மரபுகளைப் போற்றும் ஆர்வமும் உண்டு. ஒரு காலத்தில் ஞானியார் சுவாமிகளை என் தோளில் தூக்கிச் சுமந்துள்ளேன். மகாசந்நிதானம் எழுந்திருக்கக் கூடாது.” என்றார்.

இந்தச் சந்திப்புக்கு பின் நம்மிடம் சூடான விவாதங்கள் குறைந்தன. பெரியார் கொள்கையை மறுக்கும் போக்கு குறைந்தது. உடன்பட்டு நின்று பேசும் பாங்கு கூடியது. அதாவது, பெரியார் கொள்கைகளை எதிர்மறையாக அணுகாமல் உடன்பாட்டு முறையில் அணுகி, பெரியாரின் நியாயமான கொள்கைகளை ஏற்றும் உடன்படாதவற்றை நயம்பட விவாத வடிவிலும் பேசும் முறை வளர்ந்தது.

தலைவர் பெரியார் 1955-ல் மலேயா சென்றார். நாமும் 1955-ல் மலேயா சென்றோம். நாம் ஒய்வு கருதி கப்பலில் சென்றோம். பினாங்கு துறைமுகத்தில் நாம் இறங்குவதாக