பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

259



தேக்கிச் செயல்முறை என்ற கழனியில் செலுத்தினால்தான் உரிய பயன் விளையும். சிந்திக்காத மனிதனின் உணர்ச்சிகள் பொட்டல் காட்டில் பெய்த மழையைப் போலப் பயன் படாமல் போய்விடும்.

சாம்பாரும்-வாழ்வும்

சாம்பாரில் கடுகு அதிகமாகிப் போனால் சாம்பார் கசக்கும். பருப்பு அதிகரித்தால் சுவைக்கும். தன்னலம் பெருகுவது கடுகு அதிகரிப்பது போல, பொது நலம் பெருகுவது பருப்பு அதிகரிப்பது போல.

கீரைக்கட்டும்-நூல்களும்

சந்தைக்குச் சென்று கீரைக்கட்டு வாங்கும் போது பூச்சிக்கீரைகளை ஒதுக்கி நல்ல கீரைதானா என்று பார்த்து வாங்குகிறோம். ஆனால், தரமான இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதில் கீரைக்கட்டு வாங்குவதில் காட்டும் அளவு அக்கறைகூடக் காட்டுவதில்லையே!

சாளரமும்-மொழியும்

நான்குபுறமும் சாளரம் உள்ள வீட்டில்தான் நல்ல ஆரோக்கியமான காற்றோட்டம் இருக்கும்; அதுபோல நாம் பல மொழிகளையும் பயில்வதன் மூலமே நமது தாய்மொழி செழுமையுறும்.

கற்ற கல்வியும்-பெற்ற பொருளும்

கற்ற கல்வியை மறந்துவிடுவது என்பது சம்பாதித்த பணத்தைத் தெருவிலே போட்டுவிட்டு வருவது போன்றது. கற்ற கல்வியை மறந்து விட்டால் அது உற்ற நேரத்தில் கைகொடுத்து உதவாது.