பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கிடைத்தும் மாணிக்கவாசகர் அவற்றில் நின்று நிலைத்து அனுபவிக்கவில்லை. சமய வாழ்க்கையின் சிறந்த நோக்கம் இம்மையும் மறுமையும் ஒருங்கே நலம் பெறுதலேயாகும். மாணிக்கவாசகர் இம்மை நலன்களை, தம்மைத் தேடி வந்தவற்றைத் துச்சமென உதறித் தள்ளினார். "பொன் வேண்டேன்; புகழ் வேண்டேன்; பொருள் வேண்டேன்" என்று பாடுகின்றார்.

கொக்கின் நிறம்போல மாணிக்கவாசகர் அகத்தாலும் புறத்தாலும் தூயவர்-கொக்கு உட்கார்ந்திருக்கும் ஆற்றில் புனலும், போகத்துக்குரிய மீன்களும் ஓடுதல்போல, மாணிக்கவாசகர் அமர்ந்திருந்த அரசவை வாழ்க்கையில் பொருள்களும் போகமும் புரண்டன. கொக்கு, ஓடிய எல்லா மீன்களையும் பிடிக்காதது போல அவர், தமக்கு கைக்கு எட்டியனவாக இருந்த எந்தப் பொருள்களையும் போகங்களையும் விரும்பினாரில்லை. கொக்கிற்குத் தனக்குத் தேவையானதும் போதுமானதுமான மீன் எது என்று தேர்ந்தெடுக்கும் அறிவு இருப்பதால் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடிக் காத்திருக்கிறது. மாணிக்கவாசகரும் ஞானம் கைவரப் பெற்றவரானமையால் நிலையில்லாத வற்றைத் தெளிவுற உணர்ந்து நிலையான திருவருட் பேற்றை விரும்பி நிற்கிறார். நாம் விரும்புவதொன்று, விரும்பியவுடன் கிடைத்துவிடுவதில்லை. அதற்காகப் பலகாலும் காத்திருக்க வேண்டிவரும். அதுமட்டுமின்றி, கொக்கு ஆற்றங்கரையில் பெரிய மீனுக்காகக் காத்திருக்கிறது. பெரிய மீன் கிடைக்குமளவு இரவுபகல் என்று பாராமல் காத்திருக்கின்றது. காற்று, வெயில், மழை, இன்னபிற இயற்கைத் துன்பங்களை ஏற்றுப் பொறுத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது. அது மட்டுமா? அந்தக் கொக்கையே கொல்லும் பகை மனிதனும் நடமாடுகிறான். அவனுடைய குறியிலிருந்தும் அது தப்பி, இடம் மாறித் தற்காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது. அது போலவே, இறைவனுடைய திருவருளைப் பெற்று ஆரத் துய்க்க வேண்டும் என்று விரும்புகிற ஆன்மா இரவு பகல்