பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நடந்ததும் நடக்க வேண்டியதும்

19


கடைபிடிப்போடும், “நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்று ஏற்றிருந்தமையின் காரணமாகப் புயல் தென்றலாக மாற்றம் பெற்றது. சிலதிங்கள் ஒறுக்கப்பட்டிருந்தாலும் அது திருவருட்சித்தம். "புளியம் வளாரால் மோதுவிப்பாய், உகப்பாய்' என ஆளுடைய அரசு அருளிச் செய்தது போலவும் "அடியார் தினம் தினம் செய்தபிழை பரியாது அறுத்துச்சுடுவது எல்லாம் அவர் பாசத்தையே” என்று குன்றக்குடி ஆதீனக்குரு முதல்வர் வாழ்த்தாக அமைந்துள்ள அனுபூதிப்பாடல்படியும் அமைந்தது. நாம் குருமூர்த்திகளின் அருளார்ந்த உகப்பினைப் பின்னர் பெற்று அனுபவிக்க முடிந்தது.

இந்தத் தென்றல் நீடித்து நிலவ முடியாமல் மீண்டும் ஒருசுழற் காற்று! அந்தச் சுழற்காற்றுதான் நம்மைக் குன்றக் குடித் திருமடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது! நாம் தருமையிலிருக்கும்பொழுது தருமபுர ஆதீனத்தின் பிரதி நிதியாக வெளியூர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குச் செல்வதுண்டு. அதுபோல் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்திற்கும் 1948ஆம் ஆண்டு குரு பூசைக்கு வந்திருந்தோம். அப்போதே குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் திருவருள் திருமகா சந்நிதானம் அவர்கள் நம்முடைய சொற் பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இச்சொற்பொழிவு முடிந்ததும், திருமடத்தின் முகவர்கள் நம்மைக் குன்றக் குடியிலேயே தங்கும்படியாகக் கேட்டுக் கொண்டனர். நம்முடைய விருப்பமின்மையையும், ஏற்க இயலாமையையும் தெரிவித்துத் தருமபுரத்திற்கு மீண்டோம். சில திங்கள்கள் ஓடின. ஒருநாள் இரவு 10 மணி அளவில் நம்முடைய அறைக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்து பார்த்தபொழுது, திருக்கடவூர் பிச்சக்கட்டளை உரிமையாளரும், நமக்கு மிகவும் நெருங்கிய உழுவலன்பராக விளங்கியவருமாகிய திருக்கடவூர் திரு. கைலாசம்பிள்ளை அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். உள்ளே அழைத்து இருக்கச்செய்து ‘என்ன! இப்படி இரவில்?’ என்று கேட்டோம். அவர்கள்