பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெறும்! எந்தச் சூழ்நிலையிலும், கடமைகளே முன் நிற்கும்! எல்லோருடனும் ஒத்துப் போவதே கூட்டுறவாளனின் கடமை.

செல்வத்தைச் சம்பாதிப்பதால் மட்டும் செல்வராகி விடமுடியாது, அப்படிச் செல்வரான வரலாறும் இல்லை. வருவாய்க்கு ஏற்ற வாழ்க்கை, செலவு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம்தான் செல்வராக முடியும்.

வரவு - உத்தரவாதமில்லாதது. கையில் வந்த அல்லது வரப்போகிற உத்தரவாதம் செய்யப்பெற்ற வரவுக்கேற்ப செலவு செய்ய வேண்டும்; சிக்கனப்படுத்த வேண்டும். அதே போழ்து நலமுடைய வாழ்க்கையும் நடத்த வேண்டும்.

அதனால்தான் கூட்டுறவில், முதலில் பண்டக சாலைகள் தோன்றின. நியாயவிலையில் கலப்படமில்லாத நுகர் பொருள்கள் கிடைக்கக் கூட்டுறவுப் பண்டக சாலைகள் உத்தரவாதமளித்தன. தேவைக்குரிய பொருள்களும் எளிதில் கிடைத்தன.

பொருளாதாரத்தில் மிகப் பெரிய அம்சம் சிக்கனம் தான். "வாழ்க்கைச் செலவுக்கே போதவில்லை. எப்படிச் சிக்கனப்படுத்துவது?" - இது இன்று பலர் கேட்கும் கேள்வி! உண்மையைச் சொல்லப் போனால் ஒருவர் செய்யும் செலவுகளில் முதற் செலவாகச் சேமிப்பே அமையவேண்டும். இங்ஙனம் சேமித்த பொருள் எய்ப்பினுள் வைப்பாக உதவி செய்யும்.

அடுத்து, கூட்டுறவில் பொருள் உற்பத்தி. வேளாண்மைப் பொருளாதாரத்தில் கூட்டுறவின் பங்கு பற்றி முன்பே கூறினோம். அடுத்து, கூட்டுறவு முறையில் சிறு தொழில்களைத் தொடங்கி இயக்குதல். சிறுதொழில் கூட்டுறவு சங்கங்கள் நமது நாட்டில் வேலை வாய்ப்புக்களை வழங்க உதவி செய்யும்.