பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

447


நீர்களை விடுதல் தவறு. பசுமையான மரங்களை வெட்டக் கூடாது. இங்ஙனம் நல்லன அல்லாதவற்றைச் செய்வதைத் தவிர்த்தாலும் ஊர் வளரும்! வாழும்!

ஒரு சுதந்திர நாட்டின் குடிமக்களுக்கு சமூக, பொருளாதார அறிவு தேவை. இவற்றைக் கற்றுக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்! அரசியல், சமூக, பொருளாதார அறிவினை மக்கள் மன்றத்தில் வளர்க்க, இளைஞர்கள் வகுப்புக்கள் மூலம் அரசியல் அறிவை, பொருளாதாரச் சிந்தனையை வளர்க்க வேண்டும்.

ஜனநாயக வாழ்க்கை என்பது தேர்தலுக்கு மட்டுமல்ல. ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கை முறை. ஜனநாயக வாழ்க்கை முறை தனிமனிதனின் சுய விமர்சனத்தாலும், கூட்டாகப் பலர் செய்யும் விமர்சனத்தாலும் வளரும். ஆனால் மற்றவர்கள் செய்யும் விமர்சனம் உள்நோக்கம் கொண்டதாக இல்லாமல், உண்மையில் நாட்டு நலனில் அக்கறை கொண்டதாக அமையவேண்டும். "செவி கைப்பச் சொற் பொறுக்கும்” பண்பு, ஜனநாயக வாழ்க்கைக்கு, கூட்டு வாழ்க்கைக்கு, இன்றியமையாததாகும்.

ஜனநாயக வாழ்க்கை முறையின் ஆணிவேர் கட்சிகள். தவிர்க்க இயலாத தேவைகள். இந்த அமைவுகள் அதிகார வேட்கை உடையனவாகவும், ஆதிபத்திய ஆசை உடையனவாகவும், பொருளாசை உடையனவாகவவும் இருத்தல் கூடாது. நாட்டுக்குத் தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட கொள்கை அணிகளாக அமையவேண்டும். அக்குறிக்கோளை அடையும் நெறிமுறைகளிலேயே கருத்து வேறுபாடுகள்!

ஆதலால், உள்நோக்கமும், பகையுணர்வும், ஆட்சி அதிகாரத்தில் பிடிப்பும் உடைய அமைப்புக்களால், கட்சிகளால், நாட்டுக்குப் பயன் விளையாது. சட்டசபை, பாராளுமன்ற விவாதங்களில் சூடு இருக்கலாம். நாட்டில் சூடு இருத்தல் அறவே கூடாது. நல்ல ஜனநாயகப் பண்பு, பிறர் வாய்க்