நடந்ததும் நடக்க வேண்டியதும்
37
என்பது நமது இயக்க அன்பர்களுக்கு இனிய வாழ்க்கைப் பாடமாக அமைய வேண்டும். சமய அடிப்படையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் ஒரு சமுதாயத்தை அமைத்துச் சமயம் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியது என்பதை வரலாற்று ரீதியாக நிலைநாட்டுவதே இன்றுள்ள முதற்பணி. வெற்றுச் சடங்குகளில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்தை மீட்டு, அறிவில் தெளிவும் ஞானமும் பெறச் செய்ய வேண்டும். இது இன்றைய வரலாறு நமக்கு விதித்துள்ள கடமை. அறிவியல் வளர்ந்து, பூதபௌதிக உலகை இணைத்திருக்கிறது. ஆனால், மனித இதயங்களை அறிவியலால் இணைக்க இயலவில்லை; இணைக்கவும் முடியாது. அதன் காரணமாக உலகு அழிவின் எல்லையில் நின்று கொண்டிருக்கிறது. இது நீர்வாயுக் குண்டு உலகம்! இந்தக் கெட்ட போரிடும் உலகினைமீட்டு, மனிதகுல ஒருமைப்பாட்டை வளர்த்து, மண்ணில் விண்ணகத்தைக் காண முயற்சித்தலே இன்றைய சமுதாயத்திற்குச் செய்யக் கூடிய கடமை. இந்தப் பணிகளை, இன்று காலம் விதித்துள்ள கடமைகள் என்று கருதி, திருவருள் நம்பிக்கையோடு செய்வோம். இந்த நெடிய பயணத்தில் நாம் வெற்றி பெற்றால் மனிதகுல வரலாறு நம்மை வாழ்த்தும். நம்முடைய தலைமுறையோடு வறுமை, தீண்டாமை, போர்வெறி முதலிய சமுதாயக் கேடுகளுக்கு ஒரு முற்றுப் புள்ளிவைத்து, அடுத்த தலைமுறைக்குப் புதுமையும் பொதுமையும் நிறைந்த வாழ்வைப் பரிசாக வழங்க வேண்டும், சமயம், சமுதாயத்தை வழி நடத்துவதோடு மட்டுமின்றி மேலாண்மையும் பெற்று, மானிடத்தை நிலைபெறச் செய்யவேண்டும். இந்த எண்ணத்தில் நம்மோடு ஒன்றியிருப்பவர்கள் அனைவரும் நம்முடைய அன்பர்கள்! நம்முடைய அகவினத்தார்கள்! பயணம் தொடரட்டும்! பணிகள் நடக்கட்டும்! பணிகளில் ஈடுபடுவதே ஆன்மாலை, நம்மை உயர்த்திக் கொள்ளும்வழி!