பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

485


வருங்காலக் கணிப்பைக் கற்பனையில் தழுவும் சிந்தனையாளர்கள். அடிகள் இம்மூன்றையும் அறிவர்; அவர்தம் சிந்தனை இம்மூன்றையும் தழுவிய சிந்தனைபோலவே தோற்றும். ஆயினும் அடிகள் சிந்தனை, இம்மூன்றனுள் அடங்காது. எவ்வளவு உயர்ந்த ஒன்றையும் சராசரி மனிதன் நிலையில் அமைத்துக் கொடுப்பதே அச்சிந்தனைச் சிறப்பு.

"ஒரு மனிதன், சராசரித் தகுதியுடையவனாக இருப்பதற்கு அவன் இறைவழிபாடு நிகழ்த்துபவனாக இருக்க வேண்டும்.”

"சராசரி மனிதன் தன் சராசரிக் குறைகளைக் கடந்த அறிவின் முதிர்ச்சியையே ஞானம் என்கிறோம்.”

"சமய ஞானம் எக்காரணங்கொண்டும் சராசரி மனிதர்களை வேற்றுமைப்படுத்தி ஒதுக்காது.”

என்பவைகளைக் காண்க. இவ்வகையில் அடிகள் புதியதொரு சித்தாந்தச் செந்நெறியை வகுத்தருளியுள்ளார்கள்.

உடல் வாழ்வு தன்னலம் பற்றியது; உயிர் வாழ்வு பொதுநலம் பற்றியது. சராசரி மனித வாழ்க்கையை உயிர்ப் புள்ள தாக்கி முழுமையாக்கும் உணர்வின் தேவையிலேயே தோன்றியது சமயம். இதனை நிறுவிய அடிகள், "பொதுவில் ஆடுபவன் நீழலில் பொதுமையைக் காணாமல், தீமையை அகற்றாமல், நன்மையைச் சாதிக்காமல், துன்பத்தைத் துடைக்காமல், இன்பத்தைப் படைக்காமல், கிழடுதட்டிச் செயலிழந்து போன நமது சமய அமைப்புக்கள் குறையுடைய நடைமுறைகளே” என்று சாடுவதன் மூலம் நாம் வினா எழுப்பிச் சிந்திக்க வேண்டிய நிலையில்லாமலேயே முடிவை வெளிப்படுத்தியுள்ள நயம் சிந்தனையாளர்களால் நீள நினைதற்குரியது.

யாண்டும் வற்புறுத்தாத புதிய சிந்தனையை அடிகள் இந்நூலில் அமைத்துள்ளார்கள். தோய்ந்த சிந்தனை. ஆம், அருளில் தோய்ந்த சிந்தனை. அருளில் நின்று தன்னை இழந்த