பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பத்துப் பன்னிரண்டு ஓட்டு வீடுகள்! மற்றவையெல்லாம் கூரை வீடுகள்! மச்சு வீடு மருந்துக்குக்கூட ஒன்று இல்லை! ஊரில் சாதிகள் உண்டு! ஆனாலும் குடியிருப்புகள் கலந்தே இருந்தன.

ஊரின் நுழைவாயிலில் உள்ள குளம் தான் அந்த ஊருக்கு. அதில்தான் மக்கள் குளிப்பர்! தங்களுடைய மாடுகளையும் குளிப்பாட்டுவர்! எருமை மாடுகள் ஆனந்தமாகத் தண்ணீருக்குள் படுத்துச் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும். அந்த எருமைகளின் முதுகில் கிராமத்துச் சிறுவர்கள் உட்கார்ந்து சவாரி செய்து கொண்டிருப்பர்! ஒரு நாள் எங்கள் வீட்டு நாய் ராஜபாளையத்துச் சாதி நாய்-நல்ல வளர்ப்புள்ள நாய், தெரு நாயுடன் சண்டை போட்டுக் கடித்துக் குதறிவிட்டது! நாங்கள் சிறுவர்கள் இதனை வேடிக்கைப் பார்த்தோம்! தடுக்கவும் செய்தோம்! ஆயினும் விலகுகிற மாதிரி இல்லை! நாய்ச் சண்டையல்லவா? ஒரு மாதிரியாக ஆத்திரம் தணிந்தவுடன் சண்டையிலிருந்து விலகின. கடிபட்ட தெரு நாய் 'தப்பித்தேன் பிழைத்தேன்' என்று ஓடிவிட்டது.

சில நாட்கள் உருண்டோடின. ஊர்க் குளத்தங் கரையில் துர்நாற்றம் வீசியது. தாங்கமுடியாத துர்நாற்றம்! குளத்துக்குச் செல்கிறவர்கள் எண்ணிக்கை குறைந்தது. அவரவரும் அவரவர் வீட்டுக் கிணற்றிலேயே புழங்கத் தொடங்கிவிட்டனர். கிணறு இல்லாதவர்கள் அடுத்த வீட்டின் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றனர். கிணறு இல்லாதவர்கள் கிணறு உள்ளவர்கள் வீட்டுக்குத் தண்ணீர் எடுக்கச் சென்றால்...? ஏச்சுப் பேச்சு; கதவு சாத்தல் முதலியன வாடிக்கையாகிவிட்டன! எங்கள் வீட்டுத் தோட்டத்தில் கிணறு உண்டு! ஆயினும் இறைப்பு இல்லை! உபயோகம் இல்லை! கிணறு இடிந்து கிடந்தது. தாயார் முதியவர்! அடுத்த வீட்டுக் கிணற்றுக்குத் தண்ணீர் எடுக்கச் செல்ல மனமில்லை! கௌரவம் ஒரு காரணம்!. தொலைவு