பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வழியில்லை! மூக்கைப் பிடித்துக் கொண்டு முன்னேறினோம், அந்த மண்டபத்தில் ஒன்றும் இல்லை. கருவறையிலும் கண்ணுக்கு ஒன்றும் தென்படவில்லை. ஆயினும், நாற்றம் கருவறையிலிருந்துதான் வந்தது. 'ஐயோ! பாவம்! இந்தப் பிள்ளையார் அந்த நாற்றத்தை எப்படித்தான் சகித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாரோ' என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டோம்! விநாயகரை துர்நாற்றத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற முனைப்புக் கூடியது. சிறுவர்களாகிய நாங்கள் விநாயகரை நெருங்கி விட்டோம்! விநாயகருக்குப் பின்புறம் அழுகிப் பழுத்த நிலையில் நாய் கிடந்தது! அந்த நாய்க்கு என்ன விவேகம்! தெருக்கோடியில் கடிபட்ட நாய், பிள்ளையார் கோயிலைச் சரணடைந்திருக்கிறது! முத்தி என்ற ஒன்று உண்டானால் இந்த நாய்க்கு நிச்சயம் உண்டு, இதற்குள் முத்தியைப் பற்றிய சிந்தனை! வாழத் தெரியாமல்வாழ்வாங்கு வாழத் தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு ஏது முத்தி! இந்த ஊர் நாய் தேர்ந்தெடுத்துச் சரண் அடைந்த நிலை சிந்தனைக்குரியது!

நாங்களும் மூச்சை அடக்கிக் கொண்டு நாயின் சடலத்தை பொலபொலவென்று கிடந்த சடலத்தைத் தட்டுக் கூடையில் அள்ளி வெளியில் கொண்டுவந்து ஆழக் குழி தோண்டி அதில் போட்டு பாலூற்றிப் புதைத்தோம்! - கோயிலைக் கழுவிச் சுத்தம் செய்தோம்! கருவறையில் செத்த நாயைத் தொட்ட முகூர்த்தம் எங்களுக்கும். பக்தி கொஞ்சம் வந்தது. ஏன் இந்தக் கோயிலுக்கு நாம் பூஜை செய்யக்கூடாது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். அந்த முடிவு விநாயகருக்கு நாள்தோறும் பூஜை செய்வது என்பது.

இந்த முடிவு எடுத்த மாதம் மார்கழி மாதம்! அதுவும் அந்த மாதம் முதல் தேதி! நாங்கள் திருப்பள்ளியெழுச்சி, பஜனை என்றெல்லாம் திட்டமிட்டோம்! நமக்கு பூசாரி பொறுப்பு கொடுத்தார்கள்! கோவிந்தராஜனுக்குத் தண்ணீர், பூ கொண்டு வந்து தரும் பரிசாரக வேலை! ராமானுஜனுக்கு