பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

79


விழுக்காட்டு மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்! ஏராளமான சாதிகள்; சாதிகளுக்கிடையே துவேஷங்களை வளர்ப்பதே இன்றைய தொழிலாக வளர்ந்திருக்கிறது. இவையெல்லாம் நமது பண்பாட்டுக்கு அறைகூவல்கள்! கடவுள் ஒருவர். அவர் உலகத்துக்குத் தந்தை, தாய் என்று கூறுகிறோம். 'அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்' என்று சாத்திரம் கூறுவது உண்மை! ஆனால், நமது நாட்டு வாழ்க்கையில் இது உண்மையாகி இருக்கிறதா? அல்லது உண்மையாக, வாழ்வாக, வரலாறாக ஆக்கும் முயற்சியாவது இருக்கிறதா என்பதே இன்றுள்ள கேள்வி.

கேள்விக்கு விடை கிடைத்தால் இந்த அவலங்கள் ஏன்? இது விளங்காத புதிர்! கடவுள் ஏன் இப்பொழுதெல்லாம் அவதாரம் செய்வதில்லை! நாம் திருந்த மாட்டோம் என்று கடவுள் முடிவு செய்து விட்டாரா என்றெல்லாம் எங்கள் விவாதம் வளர்ந்தது. விவாதத்தின் முடிவு என்ன? இந்த நாட்டில் ஏராளமான மதங்கள், ஆயிரக் கணக்கான வழிப்பாட்டு நிலையங்கள் இருந்தும் அவலம் தொடர்வது நியாயமா? அவலங்கள் தொடரின் மதங்கள் போதிக்கும் மனிதநேயம் என்ன, ஏட்டுச்சுரைக்காயா? சமூக நீதி வழங்காத மதங்களை மக்கள் பின்பற்றுவதன் அர்த்தம் என்ன? ஒரு அர்த்தமும் இல்லை என்றே விடை கிடைக்கும். நமது நாட்டு மக்களைப் பெரிதும் பாதிக்கும் அவலங்களை எதிர்த்துப் போராடுவது சமயங்களின் பொறுப்பு! சமயத் தலைவர்களின் கடமை!

அன்றைய மாநாட்டில் நாங்கள் அனைவரும் ஒரே சுருதியில் பேசினோம். அன்றைய உரைப்போக்கில் ஓர் உண்மை வெளிப்பட்டது கடமை வேறு; வேலை வேறு. வேலை என்பது அவரவர் வாழ்க்கையோடு (பிழைப்பு, ஜீவனோபாயம்) சம்பந்தமுடையது. கடமை என்பது நாட்டோடும், நாட்டு மக்கள் வாழ்க்கையோடும், நாட்டு வரலாற்றோடும் சம்பந்தம் உடையது. கடமை என்ற சொல்,