பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கார்லைல் என்ற அறிஞன், "ஒரு நாட்டு மக்களை இணைக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஒரு தேசிய இலக்கியம் இருக்க வேண்டும்” என்று கூறுகின்றான். பாரதம் விடுதலை பெற்றிருக்கிறது. பாரதம் விடுதலை பெறும் பொழுதே நாடும் துண்டாடப்பட்டுவிட்டது. இயற்கையாக இருந்த ஒருநாடு சமயத்தின் காரணமாகத் துண்டாடப்பட்டுவிட்டது. இஃது என்றும் நீங்காத வேதனை. நாடு துண்டாடப்பட்டு விடுதலை பெற்ற பிறகும் எஞ்சியுள்ள நாட்டில் இன்னமும் உணர்வு பூர்வமான ஒருமைப்பாடு வளரவில்லை.

திரும்பத் திரும்ப ஜாதி, இன, மொழிக்கலவரங்கள் தலைதுாக்குகின்றன. இந்திய நாட்டு மக்களிடம் வலிமைமிக்க ஒருமைப்பாடு தோன்றினால்தான் இந்தியாவின் விடுதலைக்குப் பாதுகாப்பு. பல்வேறு வேற்றுமைகளுடைய மக்களை ஒருநாட்டு மக்களாக்கக் கூடிய ஆற்றல் எந்த இலக்கியத்திற்கு இருக்கிறது? பாரத நாட்டில் எல்லா மாநிலங்களிலும் பரவியுள்ள காதைகள் இராமாயணமும், மகாபாரதமுமாம். இந்திய மொழிகள் எல்லாவற்றிலுமே இந்தக் காதைகள் இருக்கின்றன. இந்தக் காதைகள் தோன்றிய காலத்தில் அவை மக்களிடத்திற் சில பண்பாடுகளைத் தோற்றுவித்தன. இன்றைக்கும்கூடச் சில இன்றியமையாத சிறந்த மனித இயல்புகளைப் பெற இந்த நூல்களின் பயிற்சி துணை செய்யும்.

மகாபாரதம் வியாசமுனிவரால் செய்யப்பெற்றது. மூலம் வடமொழியிலுள்ள கதை. ஆனால், இந்திய மொழிகள் அனைத்திலும் பாரதம் உண்டு. தமிழில் பெருந்தேவனார் பாடிய பாரதமும், வில்லிப்புத்துராழ்வார் பாரதமும், நல்லாப்பிள்ளை பாரதமும் ஆக மூன்றுண்டு. பின்னால் பாரதி, பாரதத்தின் ஒரு பகுதியைப் "பாஞ்சாலி சபதம்” என்று பாடியுள்ளான். தமிழகக் கிராமங்கள் முழுவதிலும் பாரதக் கதைக்குச் செல்வாக்கு உண்டு.