பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மையும் வாய்மையாக அவசியம் கருதிக் கருதப்படுகிறது. ஆனாலும் பொய், பொய்யேதான்; வாய்மையாகி விடுவதில்லை. நன்மை விளைந்தால் போதுமா? அவ்வளவு எளிமையாகவா வள்ளுவம் ஒழுக்கத்தைக் கூறும்? விளையும் நன்மைக்கு ஆழமான இயல்பு கூறுகிறது குறள். நன்மை "புரை தீர்ந்த நன்மை"யாக இருக்கவேண்டும். பெரும்பாலும் தனக்கு நன்மை அல்லது தன்னை மிகவும் நெருங்கிச் சார்ந்திருப்பவர்க்கு நன்மை என்ற மனப்போக்கே மக்களின் இயல்பு. ஆதலால் யாதொரு குற்றமும் இல்லாத நன்மை விளையும் பொழுதே பொய்ம்மையும் வாய்மையாகக் கருதப்பெறும்.

உலக வாழ்வினில் பகையும் பிணக்கும் சமுதாயத்தில் தோன்றிப் புரையோடாமல் தடுக்கும் நெறியே வாய்மை. வாய்மை சொல்லாக மட்டும் நின்று பொருள் உணர்த்தாமல் சொல்பவரின் ஒழுக்கத்தையும் காட்டுகிறது. "மெய்ம்மை" "உண்மை” என்ற சொற்களுக்கு இத்தகைய ஆற்றலில்லை. உள்ளதைக் கூறல் உண்மை. நிகழ்ந்ததைக் கூறல் மெய்ம்மை. உண்மை உள்ளத்தைப் பொருத்தது. மெய்ம்மை செயல்களை சம்பவங்களைப் பொருத்தது. இவற்றால் விளையும் பயன்கள் மிகுதியும் சிறப்புடையனவாக அமையா வாய்மையே மிகவும் சிறந்த ஒழுக்கம்.

பலர் வாயினால் இனிய சொற்களைப் பேசுவர். கையினால் இனியனவும் செய்வர், வடையின் வாசனையை எலிக்குக் காட்டிப் பிடிப்பதைப்போல மக்களைத் தம் வலையில் வீழ்த்திச் சுரண்டி அடக்கி ஆள! இதனை உணர்த்தவே "தன்நெஞ்சு அறிவது பொய்யற்க" என்று. கூறுகிறது குறள். பிறருக்கு இனியனபோலத் தோற்றமளிக்க லாம். பலர் அதை நம்பவும் செய்யலாம். ஆனால் அதனால் பயனில்லை. பலர் நம்புதலின் காரணமாகவே பொய், வாய்மையாகிவிடாது. உள்ளத்தினாலும் பிறருக்குத் தீமை கருதாத ஒழுக்கத்தையே வாய்மை ஒழுக்கம் என்று வள்ளுவம்