பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிகழ்ச்சிகளை, சம்பவங்களை ஆராய மாட்டார்கள். அவர்கள் பொய்யா விளக்கை அகத்தில் ஏற்றி நன்மையே கருதுவர்; நினைப்பர்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

என்பது குறள். திருவள்ளுவருக்கு வாய்மை ஒழுக்கத்தில் ஏற்பட்ட அளவுகடந்த பற்றுதலின் காரணமாக, அவர் ஐயத்திற்கிடமின்றியும், உறுதியாகவும், தெளிவாகவும் வாய்மையை வலியுறுத்துகின்றார்.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற


என்று அறுதியிட்டுக் கூறுகின்றார்.

மனித குலத்தை அலைக்கழிக்கும் கொடிய தீமைகளில் ஒன்று வெகுளுதல். அதாவது கோபப்படுதல். பலர் எளிதில் உணர்ச்சிக்கு ஆளாகின்றனர். அவ்வழி வெகுண்டு தமக்கும் பிறர்க்கும் தீங்கிழைக்கின்றனர். நொய்யரிசி உடன் வேகும்; அடிப்பிடிக்கும்; களியாகும்; பொலிவு காணாது உண்பவர்க்குச் சுவையும் நிறைவும் தராது. ஆனால் அரிசி அப்படியல்ல. நின்று வேகும்; முறையாகவும் வேகும்; சோறும் பொலிவு காணும்; உண்ணவும் இனிமையும் மனநிறைவும் தரும்.

அதுபோல, எளிதில் உணர்ச்சி வசப்படுகிறவர்கள் எளிதில் வெகுளிக்கும் ஆளாகின்றனர். தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள், "சேர்ந்தாரைக் கொல்"லும் சினத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அப்பொழுதே அவரைச் சூழ்ந்துள்ள இனம் தொடர்ந்து சூழ்ந்து நிற்கும்.

சினத்தினால் நன்மை விளைவதில்லை; இன்பம் விளைவதில்லை. மாறாகக் கேடே விளைகிறது. கையால் நிலத்தை