பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆட்டுவிக்கும் இறைவன்; இந்த நான்கினையும் ஆராய்தலே தெளிவு.

ஊழ் வினையின் விளைவு. விளைந்து ஊட்டுதல் என்பதுபொருள். "ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” என்பது சிலம்பு. பருவுடலுக்குக் கூழ் உணவு, நுண்ணுடலுடன் கூடிய உயிர்க்கு ஊழ் உணவு; உணவைத் தகுதி பார்த்து மருந்துபோல உண்ணின் உடலுக்குத் துன்பம் இல்லை. முறைகேடான உணவுகளை முறை தவறி, தேவையை மீறி உண்ணின் நீங்காத் துன்பம். எந்த உணவு இன்பத்தைத் தரவேண்டுமோ அதே உணவு துன்பத்தைத் தருகிறது. குற்றம் உணவின் மேலன்று; உடல்மீதும் அன்று. உணவின்மீது முறைதவறி வைக்கப் பெற்ற இச்சையே காரணமாகும்.

அதுபோல உயிர்க்குச் சிந்தனையும் செயலும் இன்பம் தரும்; உய்தியினைத் தரும். உயிருக்கு இயற்கை செயற்படுதலேயாம். அதனால் அன்றோ திருவள்ளுவரும் மடிசெய்து என்றார். வினைசெய்தல் உயிர்களின் கடமை. வினை செய்தல் மூலமே உயிர்கள் அறிவும் தெளிவும் அழிவிலின்பமும் பெறுகின்றன. ஆயினும் இன்பத்திற்குரியனவாகிய வினைகளே துன்பங்களையும் விளைவித்தலைப் பார்க்கிறோம்; இன்பத்தையும் விளைவித்தலைப் பார்க்கிறோம். உயிர் இன்ப துன்பங்களால் சுழலும் சுழற்சியில் சிக்கி அலமருகிறது.

உண்மையில் வினைசெயல் உயிருக்கு நல்லதா? கெடுதலா? வினை செய்தலைத் தவிர்க்க முடியுமா? அப்படி முடிந்தால் வினை செய்தலிலிருந்து விலகுவது நல்லதா? நாம் அனுபவிக்கும் இன்பதுன்பங்கள் நம்முடைய படைப்புகளா? அல்லது கடவுளின் படைப்புகளா? அல்லது உயிருக்கும் இறைவனுக்கும் தொடர்பின்றி ஊழ் படைத்த படைப்புகளா? இந்த வினாக்களுக்குத் தெளிந்த விடைகளைக் கண்டு