பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

259


கொள்ளாத வரையில் வாழ்க்கை மையலுறும்; கலங்கும்; நீடிய நல்லின்பங்கள் விளையா.

அன்புகூர்ந்து தெளிவாகச் சிந்தனை செய்யுங்கள்! திருக்குறள் உலகத்திலிருந்து சிந்தனை செய்யுங்கள்! திருவள்ளுவர் வழியில் சிந்தனை செய்யுங்கள்! வையத்தில் வாழ்வாங்கு வாழுங்கள்! இறைவன் அடி நினைத்து இன்புறுங்கள்!

வினை செய்தல் உயிரின் இயற்கை கடமை, வினை செய்தலே உயிர் உய்தற்குரிய வழி. "எது எமைப் பணி கொளுமாறது கேட்போம்” என்று மணிமொழி பேசுகிறது. அப்பரடிகள் “என்கடன் பணி செய்து கிடப்பதே" என்றார். ஆனால் எந்த வினையை எந்த அடிப்படையில், எந்த நோக்கத்தில் செய்வதென்பதே ஆய்வுக்குரியது.

தலையில் தண்ணீர்ப் பானையைத் தூக்கிக் கொண்டு ஒருவன் நடக்கிறான். பானை தானே ஆடி வீழ்வதில்லை; பானை ஆடவும் முடியாது. உடல் ஆட்டத்தினாலேயே பானை ஆடும். ஆனால் பானை ஆடி வீழ்ந்தது என்றே சொல்லுவான். காரணம் தன் உடல் ஆட்டத்தை மறைக்க வேண்டுமென்பதே. தண்ணீர் தூக்குதலான செயல் அவசிய மானது. தண்ணீர்ப் பானையும் ஆடி விழாது. உடல் ஆடாமல் நடை பயிலக் கற்றுக்கொண்டால் தண்ணீர் சுமத்தலாகிய செயல் இனிய முறையில் நிகழும். அதுபோல வினை செய்தல் இயற்கை. ஆனால் வினை செய்யும்பொழுது உள்ளத்தில் விருப்பு வெறுப்புகளாலாய கோணல் மாணல்கள் இருக்கக்கூடாது. செயல்களே ஊழாக வடிவம் பெற்று விடுவதில்லை. செயலுக்குரிய நோக்கமும், செயலால் விளையும் பயனும் பயனைக் கருதிய முறைமையும் ஊழின் தோற்றத்திற்குக் காரணங்களாகும்.

இறைவனைப் பூசித்தல் நற்செயலே. பூசை செய்தலாகிய செயலின் மூலம் நாம் இன்பமும் பெறலாம்;