பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செல்வம் அறத்தின் வழி சட்டுவதென்றால் எப்படி? அறத்தின் வழி வரும் செல்வம், நிச்சயமாகத் தேவைக்கு மிஞ்சியதாக இருக்காது. தேவைக்கு மிஞ்சிய செல்வம் எதற்கு?

நமது உடலில் தேவைக்கு அதிகமான ரத்தம் ஊறினாலும் நோய், தேவைக்குக் குறைவான ரத்தம் ஊறினாலும் நோய். இந்த இயற்கை நியதியை நாம் ஏன் பாடமாக எடுத்துக் கொள்ளக் கூடாது? பலருடைய தேவையை நிறைவு செய்யவேண்டிய செல்வம், அங்ஙணம் செய்யப்பெறாமல் பழியுடைய வழியில் தேவைக்கு மேல் குவிகிறது. உழைப்பிற்கேற்ற ஊதியம் தருதல்கூட இன்னும் உலகத்தில் மலரவில்லை. ஆளையும் நேரத்தையும் வைத்து ஊதியம் கொடுக்க நினைக்கிறார்களே தவிர, ஒருவன் உழைப்பைக் கொண்டு உருவாக்கிய செல்வத்தை மையமாக வைத்து ஊதியம் தர முன் வருவதில்லை. முறையான ஊதியம் தராது ஈட்டிய செல்வம் அறத்தின் வழி வந்ததில்லை.

செல்வத்தின் உற்பத்திக்கு - படைப்புக்கு அடிப்படையாகவுள்ள உழைப்பாளிகளின் தேவையைப் பூர்த்தி செய் யாது குவியும் செல்வம், அறத்தின் வழி வந்த செல்வமல்ல. இச்செல்வவாழ்க்கை மணற்பரப்பில் மாளிகை கட்டியதைப் போன்றது; பயனற்றது. செல்வம் அறத்தின் வழியே வரவேண்டும். ஈட்டிய பொருளை, தன்னுடைய வாயை வயிற்றைக் கட்டாமல் அனுபவிக்க வேண்டும். பலரோடும் அன்பு பாராட்டிக் கொடுத்து மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும். இங்ஙணம் அறத்தின் வழிப் பொருளிட்டித் தான் துய்த்து, பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்து அன்பு பாராட்டி மகிழாதவன் வைத்திருக்கும் செல்வம் பெயரளவிலேயே அவனுக்கு உரிமையுடையது. இச் செல்வத்திற்குரிய இவனுடைய உரிமையும் காலப்போக்கில் பறிக்கப்பெற்றுப்