பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மில்லாதவற்றைக் கருதி அவை கிடைக்காத போது அதையும் வறுமை என்று கருதி அல்லற் படுவார்கள்.

சில ஆசைகள் தனித்து வருவன அல்ல. அவற்றுக்குப் பல தோழமைகள் உண்டு. அலையின் பின் அலை மோதும் வெள்ளத்தை ஆசைக்கு உவமிப்பார் மாணிக்கவாசகர். ஆக, வறுமையின் மறுபெயர் ஆசை என்றும் சொல்லலாம்.

ஆசையினால் வரும் வறுமை குடியின் உறவையும் கெடுக்கும்; குடியையும் கெடுக்கும்; அழகையும் கெடுக்கும்; வலிமையையும் கெடுக்கும்; புகழையும் கெடுக்கும். இதனை,

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை

என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

வறுமைத் துன்பத்தால் உறக்கமும் வாராது. நெருப்பினுள்ளும் கிடந்து தூங்கலாம், ஆனால் வறுமையில் தூங்க முடியாது என்று கூறிகிறார் திருவள்ளுவர். நெருப்பு உடம்பை மட்டும் சுடும். வறுமையோ உயிரையும் உயிருணர்வையும் சுடும். ஆதலால் வறுமைத் துன்பத்தில் கண்ணை மூடவும் முடியாது என்கிறார் திருவள்ளுவர். இதனை,

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது

என்கிறார்.

நேற்று மகிழ்ந்த ஒன்றினை மீண்டும் அடைந்து மகிழ விரும்புவார்கள். ஆனால் வறுமையோ வாட்டுகிறது. அதை மீண்டும் யார் விரும்புவார்? வறுமையில் வாடுகிறவர்கள் வறுமையின் வழிச் சுவட்டைப் பார்த்தாலும் அஞ்சுவர். இதனை,