பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களும் கேட்டுப் பெறுகிறார்கள். இஃதன்று வாழ்க்கை! இஃதன்று மக்கள் நலங்கருதி இயற்றும் வாழ்க்கை!

வாழ்க்கை, தொண்டைக் குறிக்கோளாக உடையது; தொண்டைப் பயனாகவுடைது. இக்குறிக்கோளைத் திருக்குறள் "ஒப்புரவு" என்று கூறுகிறது. எந்த ஒரு செயலும், செயலளவில் தரும் பயனைவிடச் செயல் செய்யும் மனப் பாங்கு-உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே பயனை நிர்ணயிருக்கின்றது; தரத்தைக் காட்டுகின்றது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் மட்டும் போதாது. உதவிசெய்தல் எதற்காக தற்காப்புக்காகவும் இலாபத்துக்காகவும் கூட உதவி செய்யலாமே! சொல்லப் போனால் இத்தகைய உதவிகள் ஒருவகையில் வாணிகம் போலத்தான்! அதே உதவியைக் கடப்பாட்டுணர்வுடன் உதவி பெறுபவரை உறவுப் பாங்கில் எண்ணி உரிமையுடையவராக நினைந்து செய்தற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவாகும்.

ஒப்புரவில், பெறுபவர் அந்நியரல்லர்; உறவினர்; கடமையும் உரிமையுமுடையவர். ஒப்புரவு நெறி சார்ந்த வாழ்க்கையில் வள்ளல்கள் இல்லை! கொடுப்பவரும் இல்லை! வாங்குபவரும் இல்லை! ஒப்புரவு நெறி வாழ்க்கையில் உடைமைச் சார்பு இறுக்கமான தனியுடைமையாக இல்லாமல் அறநெறி சார்ந்த குறிக்கோளுடைய உடைமையாக அமையும்.

ஒப்புரவில், ஈதல்-ஏற்றல் வழி அமையும் புரவலர்-இரவலர் உறவு இல்லை. ஒப்புரவு நெறி சார்ந்த வாழ்க்கை உரிமையும் கடமையும் உடைய வாழ்வு முறையாக அமைவதால் கடமைகள், உரிமைகளை வழங்குகின்றன.