பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது அனுபவ வாக்கு. ஏன்? மனம் உடையவனே மனிதன். மனிதன் என்ற சொல்லே மனத்தின் அடிப்படையில் வந்தது என்று அறிஞர் கூறுவர்.

ஒரு மனிதனின் மனம் எப்படி இருக்கிறதோ, அது போல அவன் வாழ்வான். மனத்தில் கறை யிருந்தால் வாழ்க்கையில் கறை இருக்கும்; மனத்தில் கள்ளம் இருந்தால் வாழ்க்கையில் கள்ளம் இருக்கும். மனத்தில் கரவு இருந்தால் வாழ்க்கையில் சூது இருக்கும். மனத்தில் காழ்ப்பு இருந்தால் வாழ்க்கையில் கலகம் இருக்கும்: மனத்தில் ஆத்திரம் இருந்தால் வாழ்க்கையில் அடி, உதை இருக்கும். இதுவே இயற்கையின் நியதி.

ஒரோவழி, மனமும் செயலும் மாறுபடுவதும் உண்டு. அந்த மாறுபாடு தற்காலிகமானதே தவிர நிலையானதன்று. அது நடிப்பு, விளைவு, செயலின் அடிப்படையில் அமையாது, மனத்தின் அடிப்படையிலேயே அமையும். மனம் அன்பினைப் பற்றுமானால் வாழ்க்கை அமைதியைத் தழுவும்! மனம் அமைதியைத் தழுவுமானால் வாழ்க்கை அரவணைப்பில் நிகழும். வாழ்க்கை வளர்வது என்பது ஒருநாளில் திடீரென நிகழக் கூடியதல்ல.

வாழ்க்கையென்ற மாளிகையைப் பல நாள் முயன்று கட்ட வேண்டும். நாள்தோறும் வாழ்க்கையைக் கூட்ட வேண்டும். கூட்ட வேண்டுமென்று குறிப்பிடுவது வசதியை அல்ல. நாள்தோறும் வீட்டைக் கூட்டுவது பெருக்குவது) என்ற வழக்கு இருக்கிறது. கூட்டுவதன்மூலம் என்ன நிகழ்கிறது? தூய்மையற்ற குப்பை அகற்றப் படுகிறது; தூய்மை சேர்க்கப்படுகிறது; ஒளி ஊட்டப்படுகிறது; இன்ப நலம் இணைக்கப்படுகிறது.

அதுபோலவே வாழ்க்கையில் நாள்தோறும் மனத்தைக் கூட்டுதல் நடைபெற வேண்டும். நேற்றைய வாழ்க்கையின் நடைமுறையில் மனத்தில் சேர்ந்த துய்மைக் கேடு