பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

55


திருவரங்கத்து அமுதனின் திருவருளில் ஆழக்குளித்த ஆழ்வார்களின் அமுதத் தமிழ் மிக உயரியது. அந்தத் தமிழ் அமரகுலத்துச் சுவையினும் விஞ்சிய சிறப்புடையது. இத்தகைய நூல்களை நாள்தோறும் முறையாகக் கற்பதுதிரும்பத் திரும்பக் கற்பது, நினைந்து நினைந்து கற்பது, உணர்வது வாழ்க்கையை உயர்த்தும்.

இதுபோல ஆங்கிலத்தில் ஜேம்ஸ் ஆலன் இயற்றிய வாழ்வியல் நூல்களும், மார்க்கஸ் அரேலியஸ் எழுதிய நாட்குறிப்புகளும் வாழ்க்கையை உயர்த்தும் உயரிய நூல்கள்.

தமிழ் இலக்கியங்களில் சங்க காலத்து இலக்கியங்கள் விழுமியனவே. அவற்றில் அகத்துறை இலக்கியங்கள் இருந்தாலும் அவை மிகவுயர்ந்த அகத்துறை இலக்கியங்கள். காப்பியங்களில் இளங்கோவடிகளின் சிலம்பு சாலச் சிறப்புடையது. இத்தகைய நூல்களைத் தமிழராய்ப் பிறந்தோர் படிக்காமலும், படித்து உணராமலும், உணர்ந்து செயற்படாமலும் வாழ்ந்து மடிவது வம்பேயாம்-விணேயாம்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி
ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.


வாழ்க்கை என்ற மாளிகை

வாழ்க்கை மிக மிக அருமைப்பாடு உடையது. "வாய்த்தது. நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்" என்பது அருள்வாக்கு. உடல்கொண்டு உண்டு, உறங்கி நடமாடுவதெல்லாம் வாழ்வாகி விடாது. வாழ்க்கை உயிர்ப்புள்ளது; வளர்ச்சி பொருந்தியது. உயிர்ப்பும் வளர்ச்சியும் இல்லாத வாழ்க்கை வசை நிறைந்த வாழ்க்கை