பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

57



மனம் ஒரு மாளிகை

திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள் தமிழினத்தின் தனிமறை; உலகப் பொதுமறை; அறநூல்; முழுதுறழ் அறநூல்; உலகியலை நெறிப்படுத்திக் காட்டிய முறை நூல்; வீடு பற்றி விளக்கம் தந்த இன்பநூல்.

திருக்குறள் சமயச் சார்பற்ற நூல். ஆனாலும் சமய நெறி தழுவிய நூல். சார்பு வேறு; தழுவுதல் வேறு. சார்பு என்பது ஒன்றில் பற்றும், பிறிதொன்றில் காழ்ப்பும் காட்டுவதாகும். அதனாலேயே சார்பின்றி வாழ வேண்டும் என்பதை,

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்

என்று குறள் கூறுகிறது. யான், எனது என்ற சார்புகளின் காரணமாக மனிதன் தன்னலச் சுழலில் சிக்குகின்றான். இந்தச் சார்புகளிலிருந்து மனிதன் விடுதலை பெற்றாலேயே பொதுமை தோன்றும்; மனித இனத்தை அரித்து அழிக்கும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்பவனாகிய தீமைகள் அழியும். 'எல்லோரும் வாழ்க, இனிதே வாழ்க’ என்ற பொதுமை தோன்றும். திருக்குறள் இத்தகைய நெறியினைச் சார்ந்த பெருநூல். ஒப்பற்ற ஒரு நூல்.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய பொதுமை நூலைத் தந்த பெருமையை என்னென்போம்! இன்று சிதறிக் கிடக்கும் நாடுகளை-கண்டங்களை விந்தை மிகு விஞ்ஞான உலகம் இணைத்திருக்கிறது. விண்வெளிப் பயணமும், வானொலி நிழற்படக் காட்சியும், தொலைபேசியும் நாடுகளை இணைத்து நெருக்கத்திற் கொண்டு வந்துள்ளன. ஆனால், மனித நெஞ்சங்களை இணைப்பதில், உலகப் பொதுமை காண்பதில், இன்னமும்