பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனித சமுதாயம் வெற்றியடையவில்லை. அதனாலன்றோ இன்னமும் உலகத்தை விட்டுப் போர்ப் பதற்றம் நீங்கினபாடில்லை. ஏன்? உலகத்தை விட்டு என்ன? தனி மனிதனை விட்டும் போர் உணர்ச்சி நீங்கினபாடில்லை.

ஒவ்வொரு மனிதனும் யாரோ ஒருவருடன் போராடிக் கொண்டிருக்கிறான். வலிமையற்றவன் கூடத் தனக்குள் முணுமுணுத்து எதிர்ப்பைப் பேசி முடிக்கிறான். பொழுது விடிந்து பொழுது போனால் உயர, தாழ என்று உறுமுகின்றான். இவன் உயர்ந்தால் கவலையில்லை. ஆனால், உயர இருப்பவனைத் தன் நிலைக்கு இறக்கித் தன்னை உயர்த்திக் காட்ட அல்லவோ விரும்புகின்றான்.

இத்தகு வேடிக்கை உலகத்தை இன்று பார்க்கிறோம். திருவள்ளுவர் இந்த விகார உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு விளங்கிய சான்றோர். பொறிகளாலும் புலன்களாலும் சிறந்து விளங்கிய சீலம் நிறைந்தவர். அதனாலன்றோ எந்த ஒரு சார்புப் பற்றுமின்றிப் பொதுமையறம் செய்தார். ஆயினும், அவருடைய நூல் சிறந்த சமயம் தழுவியது.

சமயம் என்பதே பொதுமையான தத்துவம். சார்புகளில் சிக்கிச் சுழன்ற மனிதர்களே சமயம் என்ற உயர்ந்த தத்துவத்தை-வாழ்வியலைச் சார்புகளுக்குள் சிக்க வைத்து, சழக்கு நெறியாக்கி உண்மையான சமயத்திற்குச் சமாதி கட்டி விட்டனர். சமயத் துறையில்-சமய எதிர்ப்பாளர்கள் சமயத்துக்குச் செய்த கேடுகளை விட சமயச் சார்பாளர்கள் செய்த கேடுகள் அளப்பில. அம்மம்ம, நினைத்தாலும் கொடுமை! வரலாறு இவர்களை மன்னிக்காது.

சமயம் என்பது மனிதனை - அவனுடைய பொறிகளை - அவனுடைய புலன்களை நெறிப்படுத்திசெழுமைப்படுத்திப் பக்குவப்படுத்துவதேயாகும். இதை யார் செய்தால் என்ன? எந்த மொழி செய்தால் என்ன? ஆனால், இன்றோ சமயம் என்பது சாதிச் சழக்குகளுக்கு ஆட்பட்ட