பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

95


கடந்தவராகவும் விளங்குகிறார். திருவள்ளுவர் எந்த ஒரு இனத்தையும் உயர்த்தியும் பேசவில்லை; இழித்தும் கூறவில்லை. அதுமட்டுமின்றி உயிர்க் குலம் அனைத்திற்கும் ஒத்த உரிமை இருக்க வேண்டுமென்று ஐயத்திற்கு இடமின்றிக் கூறுகின்றார். உயிர்க்குலம் பிறப்பளவிற் பெறத்தக்க அடிப்படை உரிமைகளாகிய வாழும் உரிமை, கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை இவற்றில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்பது ஆகியன திருவள்ளுவர் கருத்து.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

என்பது திருக்குறள்.

திருவள்ளுவர் தம் நூலில் இனம், குலம், குடி என்று குறிப்பிட்டுப் பேசுவது உண்மை. இவைகளுக்குச் சில சிறப்பியல்புகளும் திருவள்ளுவர் தந்துள்ளார். ஆனால், இனம் என்ற சொல், திருக்குறளில் காட்டும் பொருள் வேறு. இன்று உலக வழக்கில் இனம் என்ற சொல் பெற்றிருக்கும் பொருள் வேறு. திருக்குறளில் இனம் என்ற சொல், ஒருவர் விரும்பி நலங்கருதி நாடிக் கொள்ளும் நட்பினைக் குறிக்கிறது.

ஆனால் இன்று உலக வழக்கில் இனம் என்ற சொல், பெரும்பாலும் மொழியின் அடிப்படையில் வழங்கப் பெறுகிறது. சிறு பகுதி சமய அடிப்படையிலும் வழங்கப் பெறுகிறது; சில இடங்களில் அகந்தையின் காரணமாக நிற அடிப்படையிலும், இனம் பிரித்துச் சுட்டப்படுகிறது. இங்ங்ணம் குறிக்கப்பெறும் இனங்கள் திருக்குறளுக்கு உடன் பாடுடையன அல்ல. திருவள்ளுவர் நட்பு நெறியில் நல்லினத்தைச் சிறப்பிக்கின்றார். நட்பு நெறியில் இனம் என்று சொல்லப்பட்டாலும் அஃது ஒரு கூட்டத்தைக் குறிக்காது. ஒருவர் அல்லது இருவரையே குறிக்கும். நண்பர்கள் பலராதல் இயல்பன்று. நட்பினர் பலராதல் நலம் தராது. மாறாகத் தீமை தரும். நட்பியலில் சார்ந்தவரை இனம்