பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்



221


திருவள்ளுவரே வலியுறுத்தியுள்ளார். தமது உடம்பில் உள்ள ஒரு சிறு உரோமத்தை இழந்தாலும் வாழாத கவரிமானைப் போல மானமிழந்தபின் வாழக் கூடாது என்று "மானம்” என்ற அதிகாரத்தில் திருக்குறள் வலியுறுத்துகிறது.

ஆனால், இந்தக் குறிப்பிட்ட அதிகாரத்தில் மானம் கருதக் கூடாது என்று திருக்குறள் கூறுகிறது. இஃது என்ன, திருக்குறளில் முன்னுக்குப்பின் முரண் என்று எண்ணத் தோன்றுகிறதா? திருக்குறளில் ஒன்றும் முரண்பாடு இல்லை! இடம் நோக்கிப் பொருள் கொள்ளவேண்டும்.

பொதுவாக எந்த ஒரு நற்பண்பும் காலப்போக்கில் பொய்ம்மையாகப் போய்ப் பிடிவாதத்திற்கு இரையாதல் உண்டு, இந்த நிலையில் மானம் என்பது பொய்ம்மையைத் தழுவிய மானமாகி விடுகிறது! இயல்பாக உள்ள பெருமையில்லாமல் மற்றவர்கள் தன்னை மதிக்கவேண்டும் என்ற உணர்வில் ஒரு பொய்ம்மையான மான உணர்வு உறவுகளையும் பகையாக மாற்றிச் சீரழிவு செய்துவிடும்.

பெரும்பாலும் இத்தகு பொய்ம்மை மானத்தால் அழிந்த குடும்பங்கள் பல! பிரிந்த நண்பர்கள் எண்ணிலர்! நலிந்த காதலர்கள் பலர்! உடைந்த இயக்கங்கள் பலப்பல! இத்தகு பொய்ம்மை மானம்போற்றி ஒழுகின் தாம் பிறந்த குடியை வளர்க்கமுடியாது என்று திருக்குறள் ஐயத்திர்கிடமின்றிக் கூறுகிறது!

இத்திருக்குறளுக்கு அரிய இலக்கியமாக அண்மைக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்த தலைவர் ஒருவர் இருந்தார்! தம்மை இழித்தும் பழித்தும் பேசிப்புறக்கணித்து ஒதுக்கிய தலைவர்களிடத்திலும் குடிமைப் பண்பின் காரணமாக அயராது தனது அன்பையும், மதிப்பையும், காட்டி வாழ்ந்து, தாம் பிறந்த தமிழ்க் குடிக்கு வெற்றியைத் தேடித் தந்த அறிஞர் அண்ணாவை யார்தான் மறக்க இயலும்?