பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



319


இனிய செல்வ! அண்மைக்காலத்தில் தோன்றிய தேசிய முன்னணியில் தி.மு.க. சேர்ந்தது. தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள், இந்தி இந்தியாவின் அலுவல் மொழி என்ற கொள்கையில் தீவிரக் கருத்துடையவை. ஆதலால், இந்தத் தேசிய முன்னணியில் சேர்ந்துவிட்டதால், இந்தி எதிர்ப்பைத் தி.மு.க. கைவிட்டு விட்டது என்று பரவலாகப் பேசப் படுகிறது. இஃது இன்றைய அரசியல் நிலைப்படி சரியான கருத்து அல்ல. காங்கிரஸ் வகுப்பு வாதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி. அதே காங்கிரஸ், கேரளாவில் குறிப்பிட்ட மதப் பிரிவைச் சேர்ந்த முஸ்லீம் லீக்குடன் கூட்டு வைத்திருக்கிறது. இதனால் காங்கிரஸ் மதச் சார்பின்மையை வகுப்புவாதக் கொள்கையைக் கைவிட்டு விட்டதாகக் கூற முடியுமா? ஒருக்காலும் முடியாது. இனிய செல்வ! இந்திய அரசியலில் எந்த ஒரு கட்சியும் பலம் வாய்ந்த மக்கள் கட்சியாக இல்லை. ஆதலால் கூட்டணிகள் சேர்கின்றன. கூட்டணி, கொள்கை அடிப்படையில் அல்ல. தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே நோக்கம் அல்லது நாட்டில் இருக்கும் கட்சிகளுள் பெரியதாகிய காங்கிரசை எதிர்ப்பதே நோக்கம். காங்கிரசை எதிர்ப்பது என்ற பொது உணர்வில் கட்சிகள் முன்னணியில் நிற்கின்றன. இந்த மனப்போக்கு இப்பொழுது வளர்ந்து, சிறிய, சிறிய கட்சிகளிடையே கூட மேலோங்குகிறது. அ.தி.மு.க-தி.மு.க.விற்கும் இடையே உள்ள பகைமை அத்தகையது. இவர்களுக்கிடையில் உள்ள பகைமை காங்கிரசுக்கு இலாபமும் கூட இனிய செல்வ! இது கிடக்கட்டும், அரசியல்! நாமும் மற்றவரைப் போலத் தமிழை விட்டு விடக் கூடாதல்லவா?

இனிய செல்வ! நமது நாட்டின் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் அக்டோபர் 24ஆம் நாள் பேசுகையில் “தமிழ் உணர்ச்சி இருக்கலாம்; வெறி இருக்கக் கூடாது” என்று பேசியுள்ளார். இது நூற்றுக்கு நூறு உண்மை வரவேற்கத்தக்கது. ஆனால் உண்மை என்ன என்பது பாரதப் பிரதமர் ராஜீவ் காந்திக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. தமிழர்களுக்கு இன்று தமிழ் உணர்ச்சியே