பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



413


61. நதிகள் இணைப்பு

இனிய செல்வ,

நம்முடைய நாட்டு அரசின்-பாரத நாட்டு அரசின் செயற்பாட்டைப் பார்த்தாயா? ஏன் இவ்வளவு பெரிய காலக்கொலை? 1974-இல் காவிரி ஒப்பந்தத்தின் காலம் முடிகிறது. 1974-இல் புதுப்பிக்கப்படுதல் வேண்டும். புதுப்பிப்பதில் போதிய விரைவு காட்டாமல் காலந் தாழ்த்தியதன் விளைவாக இன்று நாட்டில் உள்நாட்டுச் சண்டை! ஆம்! கர்நாடக மக்களும் தமிழர்களும் மோதிக் கொள்கிறார்கள்? ஏன் இந்த அவலம்? குற்றம் செய்பவர்களை விட, குற்றத்தை அனுமதிப்பவர்கள் முதல் குற்றவாளிகளாவார்கள் என்பது அரசியல் நியதி. இந்திய அரசு ஏன் இவ்வளவு காலம் தாழ்த்தியது? இந்திய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் எதற்காக இருக்கிறது? இந்திய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் ஆண்டுதோறும் கூடியதே, என்ன பேசினார்கள்? என்ன செய்தார்கள்? இந்திய மக்கள் தங்களுக்குள் ஏற்படும் தாவாக்களைப் பேசித் தீர்த்துக் கொள்ளாத அளவுக்கு; சிந்தனை முரடு தட்டிப் போகும் அளவுக்கு ஓர் அரசு-அதுவும் மக்கள் அரசு அனுமதிக்கலாமா? இந்திய நாட்டை ஆண்டு வந்த அரசுகள் தேர்தல் சுரத்திற்கு இரையாகி முடிவு எடுக்கத் தயங்கினவா? அல்லது தாட்சண்யத்திற்குப் பலியாகினவா? அல்லது நடுவண் அரசு எடுக்கும் முடிவுகளை மாநில அரசுகள் கேட்குமா என்ற அச்சமா? இனிய செல்வ, இவற்றுள் எதுவாக இருந்தாலும் ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணாமல் ஒத்தி வைத்துப் பின்விளைவாகப் பலப்பல சிக்கல்களை வரவழைத்துக் கொள்வதை எங்ஙனம் வரவேற்க இயலும்?

இனிய செல்வ, எப்போதும் நாடு தழுவிய, உலகந்தழீஇய நிலையில் திருத்தங்களும் செயல்முறைகளும் காண்பது நல்லது. விரிந்த நிலையில் எண்ணும்பொழுது