பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



415


தனால் நியாயம் அந்நியமாகி, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைக் கெடுத்து விடும். இனிய செல்வ, 1974-இல் காவிரி ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருக்கவேண்டும். இடையில் பதினெட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன! கர்நாடக மாநிலத்தில் பல அமைச்சரவைகள் வந்து போய்விட்டன. இது மிகவும் பெரிய தவறு. இப்போது மாநில அரசுகளிடமிருந்து காவிரி நீர்ப்பிரச்சனை மைய அரசுக்குப் போய்விட்டது. இது நமது பிரதமர் நரசிம்மராவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பு எளிதில் அமையாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும். சார்பின்றி நியாய அடிப்படையில் சிந்தித்துத் தீர்வு காணவேண்டும்; நிலையான தீர்வாகவும் இருக்க வேண்டும். காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதன்மூலம் கர்நாடக-தமிழ் மக்களிடையே உடன் தழீஇய உறவினையும் வளர்க்க வேண்டும், பிரதமர் செய்வாரா?

இனிய செல்வ, செய்தால்தான் இந்திய நாட்டின் இந்தியரின் பிரதமர், உடனடியாகத் தீர்வு காணவேண்டும். அது மட்டுமல்ல. இந்திய ஆறுகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும். காலந்தாழ்த்தாது செய்ய வேண்டும். இனிய செல்வ, தமிழ் நாட்டு முதல்வர் ஆலோசனைப்படி முதலில் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும். பின் கங்கையைத் தமிழகத்திற்குக் கொண்டு வர வேண்டும். மிகப் பெரிய காரியம். தொடங்கினால் தான் சில்லறைச் சச்சரவுகள் குறையும். இனிய செல்வ, பொதுமை ஒரு வேள்வி! இந்திய ஆறுகளை இணைப்பது இயற்ற வேண்டிய வேள்வி! இந்தத் தலைமுறையில் இயற்ற வேண்டிய வேள்வி! இந்த வேள்வியைத் தொடங்கிய பெருமை புதிய பிரதமர் நரசிம்மராவுக்குக் கிடைக்குமா! பொறுத்திருந்து பார்ப்போம்!

இன்ப அன்பு
அடிகளார்