பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



483


கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை! காங்கிரசை எதிர்ப்பதில் மட்டும் தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபடுகின்றன! கூட்டாக ஆட்சி அமைக்கவும் இயலவில்லை. இனிய செல்வ, நமது நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று திரும்பத் திரும்ப அழைக்கிறார். ஆனால், எதிக்கட்சிகள் எடுத்துக்கொள்ள தயாராய் இல்லை; நாடாளுமன்றம் மக்களுடைய மன்றம். மக்கள் வாக்களித்து, பாராளுமன்றத்துக்குச் செல்கிறார்கள். அதனால் பாராளுமன்றக் கூட்டத்தைப் புறக்கணிப்பது என்பது மக்கள் இட்ட கட்டளையைப் புறக்கணிப்பது போலாகும்.

இனிய செல்வ, அதனால் உயர்ந்த ஜனநாயக மரபுப்படி பாராளுமன்றத்தில் எந்த ஒரு சிக்கலையும் விவாதித்துத்தான் முடிவு எடுக்கவேண்டும். அல்லது ஆளுங்கட்சித் தலைவர்களும் எதிர்கட்சித் தலைவர்களும் கூடிப் பேசி - மனம்விட்டு பேசி ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவைப் பாராளுமன்றத்தின் ஏற்புக்கு வைக்கலாம். இனிய செல்வ, அமரர் ஜவகர்லால் நேரு இப்படி ஒரு சிக்கல் வரும் என்று உய்த்துணர்ந்ததால் உடன் எதிர் கட்சித் தலைவர்களைத் தமது இல்லத்திற்கு விருந்திற்கு அழைத்து விருந்து மேசையிலேயே பல ராஜதந்திர முடிவுகள் எடுக்கப் பெற்றதாக அறிந்தோர் கூறுவர். சிக்கலுக்குத் தீர்வு காணும் பொழுது பாராளுமன்ற நடவடிக்கைகளில்-பாராளுமன்ற ஜனநாயகத்தில் நாட்டு நலனை மையமாகக் கொண்டே விவாதிக்க வேண்டும்.

ஒரு கொள்கை அல்லது கோட்பாடு பலர்கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வரவில்லையென்றால் அதற்குக் காரணம் சிக்கலின் கடுமையல்ல. விவாதத்தில் ஈடுபடுவோர் ஜனநாயகப் பண்புகள் நிறைந்தவர்களாக இருக்கமாட்டார்கள். அல்லது கடின சித்தமும் பிடிவாதமும் உடையவர்களாக இருப்பர். இனிய செல்வ, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சிலர், சிக்கல் தீர்ந்துவிட்டால் தனக்குப் பேசப் பொருள்