பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



97



2. கற்ற அறவழிக் கருத்துகளை அறிவாக்கித் தெளிந்து அவ்வழி நின்று அடங்கி ஒழுகுதல் செய்க.

3. எந்தச் சூழ்நிலையிலும் சினம் வாராமல் தற்காத்து ஒழுகுதல் வேண்டும்.

4. பலர் கண்டு உரையாடி மகிழ்தலுக்குரிய இனிய பொழுதுகளை உருவாக்கிக் கொள்க.

14. ஒழுக்கமுடைமை

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.’

131

ஒழுக்கம் எல்லாருக்கும் சிறப்பைத் தருதலால், அந்த ஒழுக்கம் உயிரினும் சிறப்புடையதாகப் பேணிக் காக்கப்படும்.

ஒழுங்குகளிலிருந்து ஒழுக்கம் தோன்றுகிறது. ஒழுக்கங்கள் ஒழுங்குகளை உறுதிப்படுத்துகின்றன. உலகில் வாழும் எந்த உயிருடனும் தன்னயப்பின் காரணமாக மோதாது செவ்விதாய் வாழும் நிலையே ஒழுக்கமுடைமையாகும். ஒழுக்கமுடைமைக்கு அளவுகோல் பிறர் நலம் பேணும் பண்பேயாகும். பொறிகளிலும் புலன்களிலும் ஒரு சேரத் தூய்மை காத்தலே ஒழுக்கமுடைமை. இங்குத் தூய்மை என்பது அன்பின் வழி இயங்குதலேயாம்.

1. ஒழுக்கத்துடன் தொடர்பு இல்லாத சிறப்புகள் சிறப்புடையன அல்ல; பெருமைகள் பெருமையுடையன அல்ல. அவற்றை விரும்பற்க. ஒழுக்கம் உடையராய் வாழ்தலே வாழ்க்கை. உயிரிடத்து உள்ள காதல் போலவே ஒழுக்கத்திலும் ஆர்வம் காட்டுக. ஒழுக்கமுடையராய் வாழ்ந்தாலே வாழ்க்கைக்குப் பயன் உண்டு. அதனால் ஒழுக்கத்தை உயிரினும் பெரிதாகப் போற்றுக.

தி.iv.7.