பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



2. யாருக்கும் (பகைவர் உட்பட) மனத்தினால் தீங்கு எண்ணாதே. தீங்கு எண்ணாதிருத்தல் இயல்பன்று? ஆதலால் யார் மாட்டும் அன்பு செய்யும் எண்ணமே தீமை நினைப்பதைத் தடுக்கும். இது தலையாய ஒழுக்கம்.

3. மற்றவர் வருந்தப் பேசாதே. மற்றவரை வருத்தும் பேச்சுக்களாவன: கோள் கூறுதல், புறங்கூறுதல், இழித்துக் கூறுதல்; பழித்துக் கூறுதல். இவற்றைத் தவிர்த்திடுக. எல்லாரையும் பாராட்டுக.

4. உடலால் யாருக்கும் தீமை செய்யாதே, இது வன்முறை உணர்வில் விஞ்சி அடித்தல் கொல்லுதல் முதலியனவாம். இந்த வன்முறைச் செயல்களைத் தவிர்த்திடுக.

‘பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.’

132

ஒழுக்கத்தை எந்த வகையிலும் கெடாதவாறு வருந்தியும் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்.

தெரிந்து ஆராய்ந்தாலும் ஒழுக்கமே துணையாக அமைகிறது.

1. நல்லொழுக்கத்திற்கு இடர்ப்பாடுகள் மிகுதி. அந்த இடர்ப்பாடுகளைக் கடந்து ஒழுக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்.

2. ஒழுக்கத்திற்கு எதிராக நின்று கெடுப்பவை தன்னயப்பு துய்த்தல் வேட்கை முதலியன. இத்தீய இயல்புகளைக், கடிந்து ஒதுக்குதல் வேண்டும். தீயொழுக்கங்களைக் கடிந்து ஒதுக்குதலை விட நல்லொழுக்கங்களை இடை விடாது மேற்கொண்டு ஒழுகுதலே சிறந்த வழி.

‘ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.’

133