பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



125



‘தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.’

202

தீயவினைகள் தீமையையே தரும். ஆதலால் தீமை, தீயைவிட அஞ்சப்படும்.

நெருப்பு, தொடின் தப்பாமல் சுடும். அதுபோலத் தீயவினை தப்பாமல் தீமை செய்யும்.

தீயின் இயல்பு நன்மை செய்தலே; உலகத்தின் ஆக்கமும் வளர்ச்சியும் தீயினாலேயாம். எல்லை இகந்து தொட்டால் சுடும். மற்றபடி தீயினால் விளையும் பயன்கள் ஆயிரம் ஆயிரம்.

தீய வினைகளால் நன்மை சிறிதும் இல்லை; இன்பமே இல்லை. துன்பந்தான் கிடைக்கும். ஆதலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்.

‘அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.’

203

தம்மைப் பகைப்பவர்க்கும் தீமையானவற்றைச் செய்யாது விடுதல், அறிவுச் செயல்கள் யாவற்றிலும் சிறந்தது என்பர் அறிவுடையோர்.

நமக்குத் தீமை செய்தாருக்கு நாம் தீமை செய்தாலும் தீமையின் பயன் வாராமல் போகாது. ஆதலால் தீமைக்குத் தீமை என்பது முறையன்று, தீமைக்கு நன்மை என்பதே வாழ்வியல் முறை.

‘மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.’

204

ஒருவன், மற்றவர்க்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணவேண்டாம். அங்ஙனமின்றிக் கேடு செய்ய எண்ணின் அவனுக்குரிய கேட்டினை அறம் சூழ்ந்து செய்யும் என்பது கருத்து.