பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



127



‘எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்(று) அடும்.’

207

எத்துணைப் பெரிய பகையைப் பெற்றாரும் தப்புதற்கு இயலும்; தீ வினையாகிய பகையோ நீங்காது செய்தவரைத் தொடர்ந்து சென்று துன்பம் தரும். தப்புதல் இயலாது.

பகையைவிட, தீயவினை செய்தல் துன்பம் தரும். பகைமைக்கு மாற்று, தீயவினை என்று எண்ணும் மனப்போக்குத் தவறு என்பது கருத்து.

‘தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வியாது அடிஉறைந் தற்று.’

208

ஒருவனது நிழல் அவனையே தொடர்ந்து சென்று தங்குதல் போல், தீமை தவறாது தொடர்ந்து தீமை செய்யும்.

ஒருவரை நிழல் தொடர்தல் இயற்கை. இருள் வந்த விடத்து நிழல் தெரியாது மறைந்து போகும். பின் ஒளிவந்த விடத்துப் புலப்படும். நிழல் காணப்படாதது, நிழல் இல்லை என்பதன்று.

ஒரோ வழி செல்வம், செல்வாக்குகள் காரணமாகத் தீய வினைகளின் பயனாகிய துன்பம் தாக்கப்படாமல் இருப்பது போலத் தோன்றும். சூழ்நிலைகள் தளர்வுறும்போது தீவினைகள் துன்பத்தைத் தந்தே தீரும்.

‘தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.’

209

ஒருவன், தான் துன்பப் படாமல் இருக்க ஆசைப்படுவானாயின் பிறர்க்கு எத்துணையும் தீமை செய்யாமல் இருத்தல் வேண்டும்.

‘அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.’

210