பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



151


நம்பியாரூரரை, இறைவன் வாயிலாகச் சேக்கிழார் சிறப்பித்துக் கூறுவதை அறிக! இல்லறத்தில் வாழ்ந்தவர்கள் பக்குவம் அடைந்த நிலையில் அடுத்த தலை முறையினரிடம் தமது வழித்தோன்றல்களிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, முழுமையாக இறைவனை எண்ணவும் தொண்டு செய்யவும் மேற்கொள்ளும் வாழ்க்கை, துறவு வாழ்க்கை

25. அருளுடைமை

அருளுடைமையாவது மகவெனப் பல்லுயிர்களிடத்தும் அன்பு பாராட்டுதல். யார் மாட்டும் பாய்ந்து செல்லும் அன்புடைமையே எல்லை கடந்தமையால் அருளுடைமை என்று போற்றப்படுகிறது.

‘அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.’

241

பெறத்தக்க செல்வங்களுள் சிறந்தது அருளுடைமை. அருள் உள்ளத்தைப் பெறுதற்கு யாண்டும் எப்போதும் சம நோக்கே கொள்க.

எந்த வகையிலேனும் வந்து பற்றும் சார்புகளை நினைந்து பொருட்படுத்தாது, சார்புகளைக் கடந்து எல்லாவுயிர்களிடத்திலும் அன்பைப் பொழிக! இரக்கத்தைக் காட்டுக:

எந்தச் சூழ்நிலையிலும் யார் மாட்டும் மனவருத்தம் கொள்ளற்க. மனவருத்தம் பிணக்கைத் தோற்றுவிக்கும்; பகையைத் தரும்; அருளுடைமையைக் கெடுக்கும்; அதனால், உற்றாரும் இல்லை, பகைவரும் இல்லை என்று ஒழுகுவதே அருள் ஒழுக்கத்தைப் பேணும் வழி.