பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



26. புலால் மறுத்தல்

புலாலை உண்ணாமல் விடுதல். அருளுடைய நெஞ்சு உயிர்க் கொலைக்கு அஞ்சுதல் இயற்கை. அதனால் அருளுடைமையை அடுத்துப் புலால் மறுத்தல் கூறப்படுகிறது.

‘தன்னுரன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.’

251

தன் உடம்பைப் பெரிதாக்குவதற்காகத் தான் வேறோர் உயிரின் உடம்பைக் கொன்று தின்பவன் எங்ஙனம் அருளைக் கையாள முடியும்?

"ஊன் பெருக்கம் உயிர்ப் பெருக்கமாகாது” என்பதுணர்த்த ஊன் பெருக்கம் என்றார்.

ஊன் பெருத்தல் பயனற்றது மட்டுமின்றி நோயும் தரும். பயனற்ற ஊனைப் பெருக்க யாதொரு குற்றமும் செய்யாத உயிரினங்களைக் கொல்லலாகாது என்று எண்ணுக.

ஊன் பெருத்தால் எளிதில் நகரமுடியாது; பணிகளைச் செய்ய இயலாது என்பதை எண்ணுக.

ஊன் பெருத்ததாலேயே பண்டு வாழ்ந்த உயிரினங்கள் இறந்து பட்டுப் போயின என்ற வரலாற்றை எண்ணுக.

நிலைத்து நிற்கும் இயல்பின வல்லாத உடலின் ஊனினை வளர்க்க, நிலையானதும் என்றும் உயிர்க்கு ஆக்கம் தருவதுமான அருளுடைமையைத் துறக்க வேண்டுமா? எண்ணுக! எண்ணுக! எண்ணுக! புலாலைத் தவிர்த்திடுக!

‘பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை; அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.’

252

பொருளைப் போற்றிப் பாதுகாக்காதவர் பொருளுடையராதல் இல்லை. அதுபோல ஊனைத் தின்பவர்களுக்கு அருளை உடையராகிச் செலுத்துதல் இல்லை.