பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு



237


தெளிவாகவும் சீக்கிரமாகவும் உய்தி பெறுவதற்காகத் தேவைப்படுகிறது. எனவே அந்தத் திருமூர்த்தியை அந்தப் பெயரை, அந்த உருவத்தை, உங்களுடைய மனத்திலே எழுந்தருள வைத்துக் கொண்டு, நினைந்து நினைந்து வழிபடுவதன் மூலமாக, செயல்களைச் செய்கின்ற பொழுதெல்லாம் அந்த ஞானப் பேரொளி எப்படிச் சொல்லுகிறதோ, அதை உணர்ந்து, அது சொல்வதைக் கேட்டு, அறநெறியில் வாழ்ந்து, தீவினைகள் செய்யாது - நல்வினைகள் செய்து - பற்றற்றுச் செய்து, நல் நோக்கத்தோடு செய்து, வாழ்ந்து நம்முடைய பொறிகளையும், புலன்களையும் பக்குவப்படுத்தி, நம்முடைய கண்ணோ, காதோ, வாயோ இன்னொருவருக்குத் தீங்கு செய்யாது, மற்றவர்கள் எளிதாக நம்மிடத்திலே அணுகி, பழகி, மேவி, உறவு கொண்டாடவும், நம்மிடத்திலே ஒன்றைக் கேட்டுப் பெறவும், நாம் இன்னொருவரிடத்திலே கேட்டுப் பெறவும், எளிதாக வாழ்க்கைச் சமுதாயம் அமைக்கின்ற அமைப்பு இருக்கின்றதே, அதுதான் சிறந்த சமய வாழ்க்கை. அந்தச் சமய வாழ்க்கைக்குத் தீமை என்பது கூடவே கூடாது.

உலகத்திலே தீமை என ஒன்று நிலவுகிற வரையில் சமுதாயத்திலே நிச்சயமாக நன்மை வளர முடியாது. எனவே, தீமைகளுக்கு மாற்றாக நன்மைதான் இருக்க முடியும். நன்மைக்கு மாற்றாகச் சமயநெறிதான் இருக்க முடியும். சமயநெறி வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், நம்முடைய மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற பொறிகள் பக்குவமடைந்து அன்பினாலே புடம் போடப்பட்டு அவை தூய்மையுடையனவாக இருக்க வேண்டும். தூய்மையுடையதற்கு அடையாளம் மற்றவர்கள் மகிழ்வதுதான் என்பதை மறந்துவிடக் கூடாது. நம்முடைய மனநிறைவோ, நம்முடைய மனமகிழ்வோ தூய்மைக்கு அடையாளம் அல்ல. மற்றவர்களுடைய மனநிறைவும், மற்றவர்களுடைய மன மகிழ்வும் தான் தூய்மைக்கு அடையாளம். அந்தத்