பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொங்கல் பரிசு



245


சிறந்த ஒழுக்க நூலாகத் திகழ்கிறது. திருக்குறள் காட்டும் ஒழுக்கம் அதிமானுட (superman)னுக்கு உரியதன்று. சராசரி மனிதன் கடைப்பிடிக்கக்கூடிய ஒழுக்க நெறிகளை வாழ்க்கையோடு இணைக்க முடியவில்லை என்று யாராவது சொன்னால் அவர்களை ஐந்தறிவுடையவற்றோடு வைத்தெண்ணுவது தவிர வேறு வழியில்லை.

திருக்குறள் பழமை தழுவிய நூல். எனினும், புதுமை நலம் போற்றும் நூல். திருக்குறள் ஒரு முற்போக்கு நூல். அரசியல் மரபுச் சொற்படி கூறுவதென்றால் அது இடதுசாரி நூல். சமநிலைச் சமுதாய அமைப்பிற்குரிய வித்துக்களைப் பன்னூறாண்டுகட்கு முன்பு கண்டு காட்டிய பெருமை திருக்குறளுக்கு உண்டு.

கொம்புகளும் கொப்புகளும் அடர்ந்து நிறைந்து விளங்கும் ஒரு மரம். தோற்றத்திற்குக் கொம்புகளும் கொப்புகளுமே மிகுதியும் வரும். பயனும் அப்படியே. எனினும் கொம்புகள் கொப்புகளின் தோற்றத்திற்கு நிலைக்களனாகவும் அவற்றைத் தாங்கி நிற்பதுவும் ஆகிய அடிமரத்தை மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது. அடிமரம் இன்றேல் கொம்புகள் இல்லை; கொம்புகளும் கொப்புகளும் இல்லையானால் அடிமரத்திற்கு அழகில்லை; ஆற்றலில்லை. பயன் தரும் வகையிலும் சிறப்புக்குறையும். இதுபோன்றே தனிமனிதன்; சமுதாய அமைப்பு. பரந்துபட்டு, வளர்ந்திருக்கும் சமுதாய அமைப்பில், தனிமனிதன் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறான். தனிமனிதனின் சிந்தனையால்-சீரிய முயற்சியால்-உருவாகியதே சமுதாய அமைப்பு. தனிமனிதனின் உரிமைகள் மதிப்பிற்குரியவை. அவை மதிப்பிற்குரியவை என்ற கொள்கை ஒரு மனிதனுக்கு மட்டுமன்றி சமுதாயத்தில் வாழும் எல்லாத் தனிமனிதனுக்குமே பொருந்தும். ஒவ்வொரு தனிமனிதனும் பிறிதொரு தனிமனிதனின் உரிமையைக் காப்பாற்றிக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றான். தனிமனிதனிடத்தில் காணப்