பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும். சென்ற காலத்தில் தனி மனித வாழ்க்கையிலும் சரி, சமுாய வாழ்க்கையிலும் சரி ஏற்பட்டுள்ள எண்ணற்ற தவறுகளுக்கு அடிப்படை அறியாமையேயாகும். மயக்கத்தின் பாற்பட்ட - முறை பிறழ உணர்ந்த அறிவினாலும் தவறுகள் நிகழ்வதுண்டு.

வாழ்க்கை ஆக்கத்தின் பாற்பட்டது. ஆக்கமும் அறிவினாலாயது. ஆனால், ‘ஆக்கம் அறிவினாலும் முயற்சியினாலும் ஆவதில்லை-அது அவன் செயல்’ என்று கருதி வாழ்க்கையை இழந்தோர் ஏராளமானவர்கள். இதனை புணர்ந்த திருவள்ளுவர் அறிவுடைமையின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார். அவர் காட்டும் அறிவு அமிழ்ந்து கிடக்கும் அறிவு அல்ல; அத்திட்டத்தை எதிர் நோக்கியிருக்கும் அறிவல்ல; ஆண்டவனையே நம்பிக் கிடக்கும் அறிவுமல்ல; ‘அறிவுடையார் ஆவதறிவார்’ என்று திருவள்ளுவர் கூறுவது மிகச் சிறந்த கருத்து. சோஷலிச சித்தாந்தத்திற்கு உடன்பட்ட கருத்து.

உலகம் தொன்மையானது. சென்ற காலத்திலும் உலகம் நிகழ்ந்தது. இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று வாழும் பலர், அறிவிலும் உணர்ச்சியிலும் சென்ற காலத்திலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள். அஃது அறிவின் சின்னமல்ல. இன்றைய உலகம் எங்ஙனம் இயங்குகிறதோ அதன் இயல்புக் கேற்றவாறு தம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் அறிவுடைமை. யதார்த்த உலகம், நடைமுறையனுபவம் இவற்றோடு இணைக்கப்பட்ட அறிவே அறிவு என்பது சோஷலிச சித்தாந்தத்தின் அடிப்படை இதனைத் திருக்குறள்,

‘எவ்வ துறைவ துலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு’

426

என்று பேசுகின்றது.