பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்



281


விடாமல் தடை செய்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பல்குழு மனப்பான்மை மாறினாலே நமது நாடு உருப்படும். பல்குழுக்களின் அமைப்பு அந்த அளவோடு நின்று விடுவதில்லை. கண்டால் சிரித்துப் பேசிக் கொள்வர். ஆனால், உட்பகை இருக்கும். இந்த உட்பகையின் காரணமாகப் பலவீனங்களுக்கு வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் கலகம் செய்வர்; ஒருவரை ஒருவர் அடித்துக் கொலை செய்து கொள்வர். இதனால் நாட்டில் உருப்படியான எந்தக் காரியமும் நடக்காது. வெறும் போலீசு அரசே நடக்கும். சிறைச் சாலைகள் நிரம்பி வழியும். இங்ஙனம் விளங்குவது நாடல்ல. நாட்டில் பலகுழுக்கள், குழுக்கள் வழிப்பட்ட கலகங்கள் என்றால் நாட்டில் எப்படி அமைதி நிலவும்? பொழுது விடிந்து பொழுது போனால் கலகங்களை அடக்குவதிலேயே அரசின் ஆற்றல் முழுதும் செலவாகும். அரசு, அதன் பணியைச் செய்ய இயலாது. அதன் காரணமாக வளம் பொருந்திய நாடாக அமைக்கும் முயற்சியில் நாடு பின் தங்கி விடும். இன்று நமது நாட்டின் நிலை, எங்கும் குழுக்கள். வெளிப்படையாக நிலவும் சாதி, மத, இன, அரசியல் வேறுபாட்டுப் பிரிவினைகள் ஒருபுறம். ஓரணிக்குள்ளேயே புறத்தே தோன்றாது அகத்தே முரணிய சிந்தையுடன் கூடிய குழுக்கள் எண்ணற்றவை. இவை பெருங்கேடு விளைவிப்பன. ஒரு நாட்டிற்கு வேண்டாதன என்று திருவள்ளுவர் கூறிய கருத்துக்கள் இவை.

இனி, ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார். எதிர்மறையில் கூறியதையே உடன்பாட்டிலும் கூறலாம். திருவள்ளுவர் பிணியின்மையை மட்டும் எதிர் மறையாலும் கூறுகின்றார்; உடன்பாட்டாலும் கூறுகின்றார். ஆம்! நோயற்ற வாழ்வுதானே ஒப்பற்ற செல்வம்! அடுத்து, செல்வம் கொழிக்கும் நாடாக அமைய வேண்டும். செல்வம் சில நாடுகளில் இயற்கையாகவே அமையும். நமது நாட்டில் இயற்கை வளம் உண்டு. ஆனால்