பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கைத் துணைநல வாழ்த்து



295


இங்ஙனம் கூடிவாழ்தல் ஒரு கலை; பண்பு; நாகரிகம். ஆயினும் கூடி வாழ்தல் எளிதான் ஒன்றன்று.

கூட்டு வாழ்க்கைக்கு முதற்பகை அழுக்காறு. “அழுக்காறு என ஒருபாவி” என்று திட்டித் தீர்ப்பார் திருவள்ளுவர். ஆம்! மற்றவர்களைப் பார்த்து அழுக்காறு கொள்ளாதே! மற்றவர்களுடைய அழகை நீயும் ஆராதிக்கக் கற்றுக்கொள்! மற்றவர்களுடைய திறமையைப் போற்றிப் பாராட்டி உன்திறமையை வளர்த்துக் கொள்க!

ஆசைப்படாதே! - இது என்ன துறவிக்கு உபதேசமா? இல்லை, இல்லை! இல்லறத்தில் வாழப்போகும் அருமைச் செல்விக்குத்தான் ஆலோசனை! ஆம்! மற்றவர்களிடம் இருப்பதற்காக நீயும் வேண்டும் என்று ஆசைப்படாதே! “தேவைகளின் பெருக்கமே வறுமை” என்று ஓர் அனுபவ வாக்கு உண்டு. ஆதலால், உனது குடும்ப வருவாய் அளவில் அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பார்த்து, தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து ஆசைப்படக் கூடாது. யாரையும் கோபித்துக் கொள்ளாதே! சினம் சேர்ந்தாரைக் கொல்லும்! வேண்டாம் சினம்! எந்தச் சூழ்நிலையிலும் கோபம் வேண்டாம்! கடுஞ்சொல் கழறுதல் தீது. கொடிய சொற்களைக் கூறாதே! இனிமையாகப் பேசக் கற்றுக்கொள்! இனிய சொற்களையே வழங்குக! இந்தப் பண்பியல்புகளை நீ பெற்று விளங்கினால் உன் இல்லறம் சிறக்கும். சுற்றத்தார் சுற்றமாகச் சூழ்வர். வாழ்க்கையில் அமைதி இருக்கும். மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும்!

5

நல்ல வண்ணம் இல்லறம் அமைய இரண்டு பண்புகள் இன்றியமையாதன. ஒன்று, அன்பு; பிறிதொன்று, அறம். அன்புள்ள செல்வி! குடும்பத்தலைவி, அன்பின் பிரதிநிதி.