பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



‘விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.’

82

1. விருந்தினர், வீட்டின் புறத்திண்ணையில் இருக்க, மரணமிலாப் பெருவாழ்வு வழங்கும் அமிழ்தமேயாயினும் தனியே உண்ணல் முறையன்று. உண்பதற்கு முன் உண்பிக்க வேண்டிய விருந்தினர் உளரா என்று அறிந்து, உளராயின் உண்பித்துவிட்டு உண்ண வேண்டும்.

2. இஃது இயலாததாயின் பொருள் நிலைக்கேற்றவாறு பருகுவன தந்து பேணி வழியனுப்பிவிட்டு உண்ணல் நன்று.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

83

நாள்தோறும் தன்னிடத்தில் வரும் விருந்தினரைப் பேணுவானது இல்வாழ்க்கை, வறுமையால் துன்புற்றுக் கெடுவதில்லை.

1. விருந்தைப் பேணும் செயலுணர்வினால் தூண்டப் பெற்று மேலும் மேலும் செலவை விஞ்சிய வரவு தேவை என்ற உயர் நோக்கில் பொருள் ஈட்டும் முயற்சியில் ஈடுபடுவான்.

வரவுக்குள் செலவு - பாதுகாப்பு உணர்வினால் ஆகும் ஒழுக்கம்; செலவுக்கு விஞ்சிய வரவு மேலும் ஆள்வினையுடன் பொருள் செயலில் ஈடுபடும் ஒழுக்கம். ஆதலால் வறுமை வராது, அன்பின் விளைவால் அது ஆள்வினையில் ஆற்றுப்படுத்தும்.

‘அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.’

84

முக மலர்ச்சியுடன் நல்ல விருந்தினரைப் பேணுவானது இல்லத்தின்கண் திருமகள் மனமகிழ்ந்து குடியிருப்பாள்.