பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

189


கொள்ளுவதில் இயல்பாக விருப்பமில்லையானாலும். கோவலன் மகிழ வேண்டும் என்பதற்காகவே அவ்ன் ஒப்பனை செய்துகொண்டாள்.

கோவலன் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுடைய செல்வத்திற்கேற்ப, அவன் வள்ளமையுடையவ னாகவும் புகழுடையவனாகவும் விளங்காது போனால் மாதவியின் கூட்டினால்தான் இந்தத் தவறுகள் வந்தன. கோவலன் வள்ளன்மை இழந்தான், புகழை இழந்தான் என்று ஊரவர் பேசாதிருக்க, கோவலன் விரும்பியவாறெல்லாம் அறம் செய்து ஒழுக மாதவி துணை நின்றாள்.

மாதவியிடத்தில் கோவலன் வாழ்ந்த காலத்தில் வீரச் செயல்களைச் செய்திருக்கின்றான்; அறச் செயல்களைச் செய்திருக்கின்றான்.

கோவலனும் மாதவியும் பூம்புகாரில் தங்கள் அருமை மகள் மணிமேகலைக்குப் பெயர் சூட்டு விழா எடுத்தனர். விழாவில் கோவலனிடம் தானம் பெறுவதற்காக ஒரு பார்ப்பனன் வந்தான். சோழப் பேரரசின் பட்டத்து யானை மதம் பிடித்துப் பாகனின் கட்டுக்காவலை மீறி ஒடி வந்தது.

இடையில் சிக்கிய முதிய பார்ப்பனனை, யானை தன் தும்பிக்கையில் எடுத்துவிட்டது. கோவலன் பார்த்து விட்டான். விரைந்து யானையின் தும்பிக்கையில் பாய்ந்து அந்த முதிய பார்ப்பனனை விடுதலை செய்தான். யானையின் கொட்டத்தை அடக்கி அதன்மீது ஏறி அமர்ந்து செலுத்தினான்.

ஒன்றைக் காப்பாற்றும் பொழுது பிறிதொன்றுக்கு இழப்பு வந்தால் அது வீரமன்று. அறமுமன்று. இங்கு முதிய பார்ப்பனனும் உயிர் பிழைத்தான். யானைக்கும் யாதொரு கேடுமில்லை. கோவலனும் யாதொரு இடையூறுமின்றி யானையை வெற்றி வீரனாகச் செலுத்தினான்.