பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

195


மகள் சோரம்போக எந்த மரபும் ஒத்துக் கொள்வதே இல்லை. குறிப்பாகத் தமிழ் நாகரிகம் ஏற்றுக் கொள்வதேயில்லை.

இந்தச் சூழ்நிலையில் மாதவியின் போக்கு கோவலனுக்கு அதிர்ச்சி தந்தது. அதுவும் கோவலன் தன் செல்வத்தை இழந்த சூழ்நிலையது. செல்வம் இழந்த நிலையில் ஏற்கெனவே கோவலனுக்கு ஒரு தற்கொலை மனப்பான்மை தோன்றிவிட்டது.

தன்னிடம் செல்வம் இல்லையென்ற காரணத்தால் தான் மாதவி தன்னை மறந்து வேறொருவனை நாடுகிறாள் என்ற முடிவுக்குக் கோவலன் வந்துவிட்டான். இது மாதவி எண்ணிப் பார்க்காத ஒன்று! உணர்ச்சி வேகத்தில் நடந்துவிட்ட ஒன்று.

பிரிவு தோன்றிவிடுகிறது. கோவலன் ஆத்திரத்துடன் பிரிந்து விடுகிறான். ஆனால் கோவலன் நினைந்து பிரிவதற்குரிய அளவுக்கு மாதவி தவறு செய்பவள் அல்லள். அவள் வேறொருவனை நாடுவதாக இருந்தால் வசந்தமாலை போன்றவர்கள் குலவொழுக்கமாகிய பரத்தமையை நாடும்படித் தூண்டிய காலத்திலேயே செய்திருக்கலாம்.

மாதவி கற்புடைய பெண்ணாகக் கோவலனிடத்தில் தங்கி வாழவேண்டும். அவ்வழி பரத்தமைக் குலமரபை மாற்ற வேண்டும் என்ற திண்ணிய உறுதி கொண்டிருந்தாள்.

அதனால்தான் கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்த பொழுது ஊழினைக் காரணமாகக் காட்டவே இளங்கோவடிகள், மாதவியைவிட்டு கோவலன் பிரிகிற பொழுது “ஊழ்வினை வந்து உருத்ததாகலின்” என்று கூறுகிறார்.

அதனால், குற்றமிலராக இருந்தாலும் போதாது. குற்றங்கள் செய்யாதிருந்தால் மட்டும் போதாது. உணர்ச்சி வேகத்துக்கு ஆட்பட்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.