பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

309


இராமனுடைய பிரமன் அம்பும், சக்கராயுதமும் சேர்ந்து தாக்க, உயிரிழக்கிறான். இராவணன் மரணம் எய்தினான். கடவுள்கள் அருளிச் செய்யும் வரம், வீரம் எதுவும் நிற்காது போலும்!

இதனைக் கம்பன்,

முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய
பெருந் தவமும், முதல்வன் முன்நாள்
‘எக்கோடி யாராலும் வெலப்படாய்’
எனக் கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த
புயவலியும் தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர் பருகி, புறம் போயிற்று
இராகவன் தன் புனித வாளி!

(கம்பன்-9900)

என்று கூறி விளக்குகின்றான்.

பொருது வீழ்ந்த சீர்

இராவணன் போர்க்களத்தில் செத்துக் கிடக்கின்றான். இராவணன் கீழ்மையானவன் அல்லன், கோழையும் அல்லன், சுத்த வீரன். இராவணன் கடைசிவரையில் வீர வேள்வியே செய்தான். போர்க்களத்தில் மாண்டு கிடக்கும், இராவணனை இராமன் சென்று பார்க்கும் காட்சியைக் கம்பன்,

“போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடாப்
போர் வீரன் பொருது வீழ்ந்த
சீரினையே மனம் உவப்ப, உரு முற்றும்
திருவாளன் தெரியக் கண்டான்”

(கம்பன்-9905)

என்று கம்பன் வருணிக்கின்றான். இராவணன் போரில் எவருக்கும் புறங்கொடாதவன். இராம - இராவணன் யுத்தத்திலும் கூட அவன் வீரப்போரே செய்தான்; புற முதுகு