பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒவ்வொரு மனிதனும் தற்சார்புடைய பொருளாதார வசதி பெறுதல் வேண்டும். சார்ந்து வாழ்தல் தீது, சுரண்டும் பொருளாதாரச் சமுதாயம் அறவே கூடாது. நாடும் நாடா வளத்தனவாக வளர வேண்டும். அந்நிய மூலதனத்தின் சந்தை நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது, சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு இல்லை; அந்நிய மூலதனம் ஊளைச் சதை போலத்தான்! ஆதலால், கம்பனின் கருத்துப்படி ஏழ்மை அழிவுக்குரியதல்ல; ஆக்கந்தரும் உந்து சக்தி என்பதை ஓர்க!

தொண்டலால் ஊதியமில்லை!

மனிதகுல வரலாறு இடையறாது வளரத் துணையாய் அமைவது தொண்டு. பேசுதல் எழுதுதல் ஆகியவற்றை விடத் தொண்டு செய்தலே உயர்ந்தது. இதனைக் ‘கைத் திருத்தொண்டு’ என்பார் சேக்கிழார். சிவமும், கைத்திருத் தொண்டு செய்த அப்பரடிகளுக்கு வாசியில்லாத காசு தந்தருளிய பான்மையை உணர்க! அப்பரடிகள், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றும் “தொண்டலாது உயிர்க்கு ஊதியம் இல்லை” என்றும் அருளிச் செய்ததையும் உணர்க.

கம்பன், இராமன் வாயிலாகத் தொண்டு பற்றிக் கூறும் கருத்து, பலகாலும் படித்துணரத்தக்கது. செல்வத்திற்கு வரம்பு உண்டு. எண்ணியபடி செல்வம் வருவதில்லை. வந்தாலும் நிற்பதில்லை. தொண்டுக்கு வரம்பில்லை. தொண்டு செய்யச் செய்ய மேலும் மேலும் விருப்பம் தூண்டப்பெறும். ஆர்வம் வளரும். இந்த உலகத்தில் உடலுக்குத் தரப்பெறும் உணவு, தற்காலிகமாகப் பசியைத் தணிக்கும். ஆனால், மீண்டும் பசிக்கும் உணவுக்கும் பயன்படுவது கூலி, ஊதியம்! உண்ட உணவு அன்றாடம் கழிப்பறைகளைத் தூர்க்கும் வாழ்க்கை, முடிவில் இடுகாட்டில் கிடக்கும். ஆனால், தொண்டும்