பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது. விண்ணுலகு கருதி ஈதல் அயல் வழக்கு. விண்ணுலகு இல்லெனினும் ஈதல் தமிழ் வழக்கு.

தலைவன் பொருள் தேடப் பிரிந்து சென்றுள்ளான். ஆனால் சொன்னபடி கார் காலத்தில் திரும்பி வரவில்லை. தலைவி கவலைப்படுகின்றாள். தோழி தேற்றுகின்றாள். “தலைவன் சீக்கிரம் வந்துவிடுவான்; கவலற்க!” என்று தோழி தேற்றுகின்றாள். ஆயினும் தலைவி, ஆறுதல் பெறவில்லை! ஏன்? தலைவனுடன் பழகிய தலைவிக்குத் தெரியும் தலைவனின் இயல்பு. தலைவனுக்குத் தலைவி மீதுள்ள விருப்பத்தைவிட, பொருள் மீது தான் விருப்பம் அதிகமாம்! ஏன்? பொருட் பேராசையா? இல்லை, இல்லை! தம்மிடம் வந்து இல்லை என்று கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லும் பழக்கம் தலைவனுக்கு இல்லை. அதனால் தம்மை நோக்கி இரந்து வருபவர்கள் துன்பம் நீங்கி மகிழ்ச்சி பெற வழங்க வேண்டுமே! அதனால் தலைவனுக்குப் பொருள் மீதே விருப்பம் அதிகம். பொருள் தேடும் முயற்சியிலேயே ஆர்வம் மிகுதி என்று தலைவி தோழிக்கு எடுத்துச் சொல்கிறாள்.

இல்லென் றிரப்போர்க்கு இயைவது சுரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப
நம்மினும் பொருளே காதலர் காதல்

என்பது அகநானூறு.