பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சமயச் சின்னங்களா? தோற்றங்களா? எவற்றை உடல் தாங்கி என்? உயிரல்லவோ தாங்கிச் சுமக்க வேண்டும்! உடல் தவமே உய்தி தருமா? உயிர்த்தவம் சிறிதுமில்லா இன்று, நாகரிகம் என்பது தோலைக்கூடத் தொட்டுப் பார்த்ததில்லை!

நாகரிகம் என்பது ஊன் கலந்து, உயிர் கலந்து உணர்வில் செழித்துக் காட்டுவது! சீலத்தில் வெளிப்படுவது! நற்றிணை, நாகரிகம் இது என்று எடுத்துக் காட்டுகிறது. நண்பன் ஒருவன் தம் கண் முன்னால் நஞ்சினைக் கலந்து உண்ணக் கொடுத்தாலும் உண்பர் நாகரிகமுடையவர். நஞ்சினை உண்பதோடன்றி நஞ்சென நினையாது அமைதி பெறுவர். நஞ்சினைக் கொடுத்தோர்மீது பகை பாராட்டமாட்டார். மேலும், அன்பினோடு மேவிப் பழகுவர்; நட்புக் கொள்வர். இத்தகைய வாழ்க்கையே நனி நாகரிக வாழ்க்கை,

“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்”

(நற்றிணை 355 : 6-7)

என்று நற்றிணை சிறப்பித்துக் கூறும். இத்தகைய சங்கத் தமிழர் வாழ்வியலின் நாகரிகம் இன்றைய மானிட சாதியில் நிலவும் பகைப் புயலுக்கு மருந்து.

சங்க காலத் தமிழர் வாழ்வியல் மிகமிகச் சிறந்தது. சங்க காலத் தமிழர் வாழ்வியலில் பாடறிந்து ஒழுகும் பண்பாடிருந்தது. தன் கிளை செறாமல் பேணி வளர்க்கும் அன்பிருந்தது; பேதைமையைக் கண்டும், நோற்கும் அறிவிருந்தது; தூய காதல் சிறந்திருந்தது. அது வீரத்தின் விளை நிலமாக இருந்தது.

சங்க காலத் தமிழர் கொடை மடம் பட்டுப் புகழ் பெற்று விளங்கினர்; பொருள் போற்றினர்; இன்பம் துய்த்தனர்! அறநெறி கண்டனர்; இறைநெறி போற்றினர்.