பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இனிய காண்க!

53


முடியாது. அதனால் உலகத்தில் துன்பம் நிலையானதாகி விட்டது. மனிதனும் துன்பம் இயற்கையானது, துன்பத்தை மாற்ற முடியாது என்ற பைத்தியக்காரத்தனமான முடிவுக்கு வந்துவிட்டான். இது வாழும் நெறியன்று.

மனித உலகம் துன்பத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமானால், மரணத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமானால், அடிமைத்தனத்திலிருந்து பரிபூரணமாக விடுதலை பெற வேண்டுமானால், மனிதர்கள் துன்பம் இயற்கையன்று என்ற அறிவின் தெளிவைப் பெறவேண்டும். மனித உலகத்தின் கொடிய பகை அறியாமை. அறியாமையைக் கருவியாகக் கொண்டு ஆதிக்கக்காரர்களால் படைக்கப் பெற்ற வேற்றுமைகளை, எல்லைக் கோடுகளை மனிதன் நிலையானதெனப் பற்றிக் கொண்டுவிட்டான். அந்த எல்லைக் கோடுகளை, வேற்றுமைகளைப் பாதுகாப்பதிலேயே இன்றையச் சக்தி முழுவதையும் செலவழிக்கின்றான்.

உலகத்தை ஒன்றுபடுத்தத் தோன்றிய சமய நெறிகளில் கூட அனுபவம் குறைந்து ஆர்ப்பாட்டம் பெருகிவிட்டது. “இவர் தேவர் அவர் தேவர்” என்று இரண்டாட்டுகின்ற தொழில் ரீதியான புரோகிதர்கள் பல்கிப் பெருகிவிட்டனர். அதனால் மனிதன் எப்படியோ போராடிக் கொண்டிருக்கிறான். அவனுடைய போர்க்குணம் ஓய்ந்தபாடில்லை. போர் முனை மாறுபட்டிருப்பதே துன்பத்திற்குக் காரணம். ஆதலால் நாம் பக்குடுக்கையார் எடுத்துக்காட்டும் வழியில் போராட்டத்தைத் தொடங்கவேண்டும். துன்பம் இயற்கை யென்று நம்பக் கூடாது. அப்படியே துன்பம் இயற்கையாக இருந்தாலும் நாம், அதனை மாற்ற வேண்டும் என்ற நோன்பை மேற்கொள்ள வேண்டும். அன்றுதான் உலகின் வறுமை நீங்கும், வளம் கொழிக்கும், ஒருலகம் தோன்றும். “இன்னாதம்ம இவ்வுலகம் இனிய காண்க” என்ற ஆணையை மறவாதீர்! ஓர்ந்து உணர்க. உணர்ந்து செயற்படுக!